Published : 02 Dec 2016 09:04 AM
Last Updated : 02 Dec 2016 09:04 AM
உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன்-கர்ஜாகின் ஆகிய இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறை யில் வெற்றியாளரை தேர்ந்தெடுக் கும் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் ரேபிட் முறையில் 4 சுற்றுகள் நடத்தப்பட்டது. முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் அடுத்த இரு சுற்றுகளிலும் கார்ல்சன் வெற்றி பெற்றார். முடிவில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற அவர் 3-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார்.
2013-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியிலும், 2014-ல் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டி யிலும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.3.98 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
3 முறை தொடர்ச்சியாக பட்டம் வென்று தனது ஆதிக்கத்தை தொடரும் கார்ல்சன், 15 ஆண்டுகளாக செஸ் உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்த ஜாம்பவான் கேர்ரி காஸ்பரோவின் அந்தஸ்தை நெருங்கி உள்ளார்.
தனது 26-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய கார்ல்சன், கடந்த 2010-ம் ஆண்டு முதல் உலக செஸ் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT