Published : 19 Jan 2023 09:40 PM
Last Updated : 19 Jan 2023 09:40 PM
புவனேஷ்வர்: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய ஹாக்கி அணி, வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் முதல் சுற்றுப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார்.
புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு ஹாக்கி விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.
குரூப்-டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று பலம் வாய்ந்த வேல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இந்த போட்டி புவனேஷ்வரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு வழக்கம் போலவே உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் அமோகமாக இருந்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் பதிவு செய்ய முயற்சி செய்தன. இந்திய அணி 21-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. அடுத்ததாக 32-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் பதிவு செய்தது இந்தியா.
அதற்கான பதில் கோல்களை 42 மற்றும் 44-வது நிமிடத்தில் வேல்ஸ் பதிவு செய்தது. கடைசி 15 நிமிடங்களில் 45 மற்றும் 59-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து 4-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப்-டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக வரும் 22-ம் தேதி விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதியில் குரூப்-பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா விளையாடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT