Published : 18 Jan 2023 07:35 AM
Last Updated : 18 Jan 2023 07:35 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 35 வயதான ஆண்டி முர்ரே, தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் கடுமையான வெப்பம் காரணமாக ராட் லேவர் அரங்கில் மூடப்பட்ட கூரையின் கீழ் நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 (7-9), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்டில் 75-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸை தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 2 நிமிடங்களில் முடிவடைந்தது. 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலேவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை தோற்கடித்தார்.
8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-4, 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலியையும், 9-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிக்கையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூர் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் போராடி 88-ம் நிலை வீராங்கனையான ஸ்லோவேனியாவின் தமரா ஜிடான்செக்கை 7-6 (10-8), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 4-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கனடாவின் கேத்ரின் செபோவையும், 5-ம் நிலைவீராங்கனையான பெல்லாரஸின் சபலெங்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் தெரேசா மார்ட்டின்கோவாவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT