Published : 17 Jan 2023 08:27 AM
Last Updated : 17 Jan 2023 08:27 AM
பினோனி: 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஷபாலி வர்மா, சுவேதா ஷெராவத் ஆகியோரது அதிரடியால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள்குவித்தது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஷபாலி வர்மா 34 பந்துகளில், 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 78 ரன்களும் சுவேதா ஷெராவத் 49 பந்தில், 10 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 111 ரன்கள்விளாசி மிரளச் செய்தது. ரிச்சா கோஷ் 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் கோங்கடி த்ரிஷா 11 ரன்களும் சேர்த்தனர். 220 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக மஹிகா கவுர் 26, லாவன்யா கெனி, தீர்தா 16 ரன்கள் சேர்த்தனர். 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ‘டி’ பிரிவில் 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT