Published : 16 Jan 2023 02:59 PM
Last Updated : 16 Jan 2023 02:59 PM

‘நீ செலக்ட் ஆயிட்டே, ரெடியாயிரு’ என ஆசை காட்டி மோசம் செய்த தேர்வுக்குழு: குமுறுகிறார் சர்பராஸ் கான்

‘இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாய்... வங்கதேச தொடருக்கு ரெடியாக இரு. நீ செலக்ட் ஆயிட்டே’ என்று மும்பை ரன் மெஷின் சர்பராஸ் கானிடம் ஆசை காட்டி அவரைத் தேர்வு செய்யாமலேயே மோசம் செய்துள்ளது இந்திய அணித் தேர்வுக்குழு. இதை தற்போது வெளிப்படையாகக் கூறி குமுறியுள்ளார் சர்பராஸ் கான்.

சர்பராஸ் கான் 2019/20 ரஞ்சி சீசனில் 998 ரன்கள், சராசரி 154.66. அடுத்த ரஞ்சி சீசனில் 122.75 என்ற சராசரியில் 982 ரன்கள். நடப்பு சீசனில் இதுவரை 801 ரன்களை 89 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இவரது கரியர் சராசரி 80.47. 50 இன்னிங்ஸ்களை குறைந்தது ஆடிய வீரர்களிடையே சர்பராஸ் கானின் சராசரி டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஆனால் பிசிசிஐ-க்கு இதெல்லாம் போதாது.

இவருக்கு சரியான, பெரிய ஸ்பான்சர்கள் இருந்தால் இந்நேரம் சர்பராஸ் கான் உள்ளே தேர்வாகியிருப்பார், இதுதான் இன்றைய பிசிசிஐ-யின் எதார்த்த நிலை. முதலீட்டிய சக்திகள், ஐபிஎல் சக்திகள் போன்ற வணிக சக்திகள்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை இப்போது நடத்துகின்றன.

குல்தீப் யாதவ் 40 ரன்கள் 8 விக்கெட் எடுத்த பிறகும் கூட அடுத்த போட்டியில் இல்லை என்பதற்கு இதுதான் காரணம். ஏனெனில் தேர்வுக்குழுவில் ஜடேஜா லாபி பெரியது, அவரும் இப்போது அரசியல் களத்தில் குதித்திருப்பதால் அவருக்கான லாபி பெரிதாகியுள்ளது. எனவே அவர் உள்ளே வரும்போது இடம் தயாராக இருக்க வேண்டும். அப்போது போய் குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாது போய்விட்டால்... ஜடேஜா லாபிக்கு யார் பதில் கூறுவது? இதுதான் இன்றைய பிசிசிஐ-யின் நிலை.

அதனால்தான் அணித் தேர்வுகளில் இத்தனைக் குளறுபடிகள், வங்கதேசத்தில் இரட்டைச் சதம் விளாசித் தள்ளிய இஷான் கிஷனை தேர்வு செய்ய மறுக்கின்றார்கள். காரணம் ரோஹித், விராட் கோலி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா வணிக லாபி இஷான் கிஷனை விட பெரியது. இந்நிலையில். ‘ரெடியாயிரு, வங்கதேசம் போக வேண்டும், நீ தேர்வாகி விட்டாய்’ என்று அணித்தேர்வுக் குழுவில் யாரேனும் கூறினால் கூட அதை சர்பராஸ் கான் நம்புவதா என்பதே நம் கேள்வி.

சர்பராஸ் கானும் இப்போது புரிந்து கொண்டுவிட்டார், அதனால்தான் அவர் அளித்துள்ள பேட்டியில் குமுறித் தள்ளியுள்ளார்: “இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட போது என் பெயர் அதில் இல்லை. நான் மிகவும் வேதனையடைந்தேன், என் இடத்தில் உலகில் யார் இருந்தாலும் வேதனையே படுவார்கள். நிச்சயம் தேர்வாகி விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் தேர்வு செய்யவில்லை. நேற்று ஒருநாள் முழுதும் நான் வேதனையுடன் சோகமாகவே இருந்தேன், வேலையே ஓடவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மிகவும் தனிமையில் இருந்தேன், ஒரு கட்டத்தில் வாய் விட்டு அழுதே விட்டேன்.

ரஞ்சி டிராபி பைனலின்போது நான் சதமெடுத்த பிறகு பெங்களூருவில் செலக்டர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள், ’உனக்கான வாய்ப்பு வந்து விட்டது பங்களாதேஷ் தொடருக்கு தயாராக இரு’ என்று கூறினார்கள். ஆனால் நடக்கவில்லை. இப்போது மும்பையில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோது அணித்தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மாவைப் பார்த்தேன். அவர் என்னிடம் “மனது உடைந்து விடாதே, உனக்கான நேரம் வந்து விடும். நல்ல விஷயங்கள் நடக்க நாளெடுக்கும், இந்திய அணியில் விளையாடுவதற்கு நெருக்கமான இடத்தில் இருக்கின்றாய், உனக்கான வாய்ப்பு உண்டு” என்றார்.

இன்னொரு முக்கியமான இன்னிங்ஸையும் ஆடிவிட்டேன், ஆனால் இந்திய அணியில் தேர்வாகவில்லை. பரவாயில்லை என்ன செய்வது என்று மனத்தை தேற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று குமுறியுள்ளார் சர்பராஸ் கான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x