Published : 13 Jan 2023 05:54 AM
Last Updated : 13 Jan 2023 05:54 AM
ரூர்கேலா: ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் 15-வது பதிப்பு ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானம் மற்றும் ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்சா முண்டா மைதானம் ஆகியவற்றில் நடத்தப்பட உள்ளது. வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றன. கால் இறுதி சுற்று ஆட்டங்கள் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 27-ம் தேதியும் இறுதிப் போட்டி 29-ம் தேதியும் நடைபெறுகின்றன.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளும் ‘பி’ பிரிவில்நடப்பு சாம்பியனான பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூஸிலாந்து, மலேசியா, சிலி அணிகளும் ‘டி’ பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில்உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.இதில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி கால் இறுதி சுற்றுக்குநேரடியாக நுழையும். லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் கிராஸ்-ஓவர் சுற்றில் விளையாடும். 8 அணிகள் விளையாடும் இந்த சுற்றில் இருந்து 4 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் 1 மணிக்கு அர்ஜெண்டினா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு ஆட்டங்களும் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு இங்கிலாந்து – வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம்21 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கக்கூடிய வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்சா முண்டா மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி 1971-ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரில் வெண்கலப் பதக்கமும், 1973-ம் ஆண்டு தொடரில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி இருந்தது. தொடர்ந்து 1975-ம் ஆண்டு அஜித் பால் சிங் தலைமையில் இந்தியா பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற எந்த ஒரு தொடர்களிலும் இந்திய அணி அரை இறுதிக்கு கூட முன்னேறியது இல்லை.
இதனால் இந்திய அணியின் உலக கோப்பை தாகம் 48 வருடங்களாக நீடிக்கிறது. எனினும் கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதால் இம்முறை வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணி பதக்கம் வென்றால் உலக ஹாக்கி அரங்கில் திருப்பங்கள் ஏற்படக்கூடும்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 1978முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணி லீக் சுற்றை கடந்ததுஇல்லை. அதேவேளையில் 2018-ம்ஆண்டு தொடரில் கால் இறுதி சுற்றில் இந்திய அணி நெதர்லாந்திடம் தோல்விகண்டு வெளியேறியது. ஆனால் இம்முறை ஹர்மான்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பதக்கம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 தோல்விகளை சந்தித்த போதிலும் தொழில்நுட்ப விஷயங்களில் திறனை மேம்படுத்திக் கொண்டது.
அதேவேளையில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருஆட்டத்தில் வெற்றியும் கண்டது. கடந்த 6 வருடங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பதிவு செய்த முதல் வெற்றியாகவும் இது அமைந்திருந்தது. உலகக் கோப்பை தொடரில் முதற்கட்டமாக இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படக்கூடும்.
2021-22-ம் ஆண்டில் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்திய ஹாக்கி புரோ லீக்தொடரில் இந்திய அணி 3-வது இடம்பிடித்திருந்தது. இது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. 2019-ம் ஆண்டு கிரஹாம் ரீட் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து வீரர்களின் செயல் திறன் சீரான வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
கேப்டன் ஹர்மான்பிரீத் சிங், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த டிபன்டரும், டிராக் பிளிக்கருமான அவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடியவராக திகழக்கூடும். கோல் கீப்பர் பிஆர் ஜேஷ், மிட்-பீல்டு மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஸ்டிரைக்கர் மன்தீப் சிங் ஆகியோர் ஆட்டத்தின் தருணங்களை மாற்றும் திறன் கொண்டவர்கள். இவர்களுடன் பெனால்டி கார்னரில் சிறப்பாக செயல்படக்கூடிய முன்னாள் கேப்டனும் டிபன்டருமான அமித் ரோஹிதாஸ், முன்கள வீரரான ஆகாஷ்தீப் சிங் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.
இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்குவதில் முனைப்பு காட்டக்கூடும். முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக நுழைவதில் சிரமம் இருக்காது. இல்லையென்றால் கிராஸ்-ஓவர் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்பெயின் ஒருபோதும் இந்திய அணிக்கு எளிதான அணியாக இருந்தது கிடையாது. உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் இந்தத் தொடரில் இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக திகழ்கிறது. இதுவரை அந்த அணி உலகக் கோப்பையில் பட்டம் வென்றது இல்லை என்ற போதிலும் போட்டியின் நாளில் எந்த ஒரு அணிக்கும் கடும் சவால் அளிக்கக்கூடியதாகவே திகழ்கிறது. 1971 மற்றும் 1998-ம் ஆண்டு நடைபெற்ற தொடர்களில் ஸ்பெயின் அணி 2-வது இடம் பிடித்திருந்தது. அதன் பின்னர் 2006-ல் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தது.
பயிற்சியாளராக அர்ஜெண்டினாவின் முன்னாள் வீரர் மேக்ஸ் கால்டாஸும், கேப்டனாக அனுபவம்வாய்ந்த அல்வாரோ இக்லசியாஸும் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் புவனேஷ்வரில் நடைபெற்ற புரோ லீக் ஹாக்கி தொடரில் ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வென்றிருந்தது. இதே தொடரில் இந்திய அணி ஸ்பெயினுக்கு பதிலடியும் கொடுத்திருந்தது. இரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 13 ஆட்டங்களிலும், ஸ்பெயின் 11 ஆட்டங்களிலும் வெற்றி கண்டன. 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தது.
இந்தியா: ஹர்மான்பிரீத் சிங் (கேப்டன்), அபிஷேக், சுரேந்தர், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், ஜர்மான்பிரீத் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், கிரிஷன் பதக், நிலம் சஞ்ஜீப், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், வருண் குமார், ஆகாஷ்தீப் சிங், அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத், சுக்ஜீத் சிங்.
ஸ்பெயின்: ஆண்ட்ரியாஸ் ரஃபி, அல்ஜான்ட்ரோ அலோன்சோ, சீசர் குரியல், சேவி கிஸ்பெர்ட், போர்ஜா லாகல்லே, அல்வாரோ இக்லேசியாஸ், இக்னாசியோ ரோட்ரிக்ஸ், என்ரிக் கோன்சலஸ், ஜெரார்ட் கிளாப்ஸ், ஆண்ட்ரியாஸ் ரஃபி, ஜோர்டி பொனாஸ்ட்ரே, ஜோவாகின் மெனினி, மரியோ காரின், மார்க் பெய்ன், மார்க் மிரல்லஸ், பெப்பே கனில், மார்க் ரீகாசென்ஸ், பாவ் கனில், மார்க் விஸ்கைனோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT