Published : 12 Jan 2023 08:57 PM
Last Updated : 12 Jan 2023 08:57 PM
கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றி பெற செய்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதோடு ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 215 ரன்கள் எடுத்தது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 86 ரன்களுக்குள் ரோகித், கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இந்தியா இழந்தது. பின்னர் ஹர்திக் உடன் இணைந்து நிதானமாக ஆடினார் கே.எல்.ராகுல். இருவரும் 75 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹர்திக், 36 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த அக்சர் படேல் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த கே.எல்.ராகுல் 103 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். 43.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து இலக்கை வெற்றிகரமாக கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை 2-0 என வென்றுள்ளது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணிக்காக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் நுவனிது பெர்னாண்டோ இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். அவிஷ்கா 20 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த குசல் மென்டிஸ் உடன் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் நுவனிது பெர்னாண்டோ. இருந்தும் அதன் பிறகு அந்த அணிக்கு நிலையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
மென்டிஸ், 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தனஞ்ஜெய டி சில்வா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். தொடர்ந்து நுவனிது பெர்னாண்டோ, 50 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை இழந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய அந்த அணியின் கேப்டன் ஷனகா 2 ரன்களில் வெளியேறினார். 39.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT