Published : 19 Dec 2016 03:26 PM
Last Updated : 19 Dec 2016 03:26 PM
பிரிஸ்பனில் நடைபெற்ற ‘பிங்க்’ பந்து பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 490 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக பாகிஸ்தான் அபாரமாக விரட்டி 2-வது இன்னிங்சில் 450 ரன்கள் எடுத்து போராடி தோல்வி தழுவியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னின்ஸில் ஆஸ்திரேலியா 429 ரன்களை எடுக்க பாகிஸ்தான் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரெலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, இதனையடுத்து 490 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் நேற்று 382/8 என்று இருந்தது. இன்று 450 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இன்று காலை ஆசாத் ஷபிக், யாசிர் ஷா ஜோடி ஸ்கோரை 449க்கு உயர்த்தி ஆஸ்திரேலியாவை மிரட்டியது. ஸ்மித் பல்வேறு பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து யாசிர் ஷா-வையும் ஆசாத் ஷபிக்கின் உறுதியையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு முறை யாசிர் ஷா, ஹேசில்வுட்டின் உள்ளே வந்த பந்தை ஆடாமல் விட முடிவெடுத்து பந்து கால்காப்பைத் தாக்க நடுவர் அவுட் என்றார், ஆனால் யாசிர் ஷா ரிவியூ செய்ய பந்து மேலே செல்லும் என்று உறுதியானது. மற்றொரு முறை நேதன் லயன் பந்து ஒன்று மட்டையைக் கடந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் ஸ்டம்ப்டு முயற்சி செய்தார், ஆனால் பின்னங்காலை குறித்த நேரத்தில் யாசிர் ஷா கொண்டு வந்தார். இடையே ஜேக்சன் பேர்டு பந்தை அருமையான ஹைபிளிக்கில் பவுண்டரி அடித்து மிரட்டினார்.
ஆசாத் ஷபிக் தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடினார், இவரது டவுனை பின்னால் கொண்டு வந்தது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். காரணம் தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வந்தார், இவரை ஆர்தர் சச்சினுடம் ஒப்பிட அவருக்கு பிறந்தது உத்வேகம், மிக அபாரமான சதம் ஒன்றை அவர் அடித்தார். இது பாகிஸ்தானுக்கும் அவருக்கும் நமக்குமே மறக்க முடியாத ஒரு சதமாக அமைந்தது.
207 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 137 ரன்கள் எடுத்து 145-வது ஓவரை ஸ்டார்க் வீச, ஸ்டார்க் ஒரு பந்தை ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஒரே ஏத்து ஏத்தினார், பந்து ஷபிக் மார்புயரத்திற்கும் அதிகமாக எகிற, அவருக்கு நேரமே இல்லை. பந்திலிருந்து கண்களை எடுத்து விட்ட் அடிபடக்கூடாது என்பதர்காக மட்டையை முக உயரத்திற்கு எழுப்ப பந்து மட்டையில் பட்டு வார்னரிட ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. .இத்துடன் பாகிஸ்தானின் கனவு விரட்டலும் முடிவுக்கு வந்தது. உடனேயே யாசிர் ஷா-வும் இல்லாத ரன்னுக்காக ஓடி ஸ்மித்திடம் ரன் அவுட் ஆனார். யாசிர் ஷா 33 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் 450 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜேக்சன் பேர்டு 3 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக மிகச்சரியாக ஆசாத் ஷபிக் தேர்வு செய்யப்பட்டார். பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்போதும் கடினம், ஆனால் பாகிஸ்தான் வெற்றி வரை வந்து வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.
ஸ்மித் வெற்றி பெற்றதனால் பெரிய கேப்டனாகத் தெரிவார், ஆனால் அவரது களவியூகம், ஆரம்பத்தில் நெருக்கடி கொடுக்காமல் பாகிஸ்தானை இந்த அளவுக்கு துரத்த களம் அமைத்துக் கொடுத்தது என்று இயன் சாப்பல் விமர்சித்தது மட்டுமல்லாமல் வக்கார் யூனிஸும் இதே விமர்சனத்தை முன் வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT