Published : 10 Jan 2023 05:25 PM
Last Updated : 10 Jan 2023 05:25 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆடுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும்தான் விளையாடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இப்போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் 99 புள்ளிகளுடன் 58.93% என்று 2ம் இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இலங்கை, 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. எனவே ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான இறுதிப் போட்டிக்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பந்த் காயமடைந்திருப்பது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக உள்ளது. அந்த அதிரடி வெற்றிடத்தைப் போக்க சூர்யகுமார் யாதவை அணியில் கொண்டு வருவதுதான் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும். இதோடு சூர்யகுமார் யாதவின் எஞ்சியிருக்கும் கிரிக்கெட் காலத்தில் முழுமையாக அவரது அதிரடியைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமும் கூட.
ரிஷப் பந்த் துரதிர்ஷ்டவசமாக கார் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் உடல் மற்றும் மன ரீதியாக தயார் ஆவதைப் பொறுத்துதான் அவரது பழைய பேட்டிங்கை நாம் எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த் பிரமாதமாக ஆடி தொடரையே வெல்வதற்கு முக்கியக் காரணியாக இருந்தவர், ஆஸ்திரேலியாவுக்கு அச்சம் தரும் ரிஷப் பந்த் இல்லாதது ஆஸ்திரேலியாவின் கையை ஓங்கச்செய்யவே செய்யும். எனவே அவரது இடத்தில் இன்னொரு பெரிய அதிரடி வீரரை இறக்கிப் பார்ப்பதுதான் உத்தமம். அதற்கு சூர்யகுமார் யாதவ்தான் சரியாக வருவார்.
மேலும் விராட் கோலி தலைமையில் 2018-19ல் மற்றும் 2021ல் ரஹானே தலைமையிலும் ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை வென்ற ஒரே ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கே உள்ளது. இரண்டு தொடர்களை இழந்த நிலையில் பாட் கமின்ஸ் தலைமையிலான புத்துணர்வு பெற்ற புதிய ஆக்ரோஷ ஆஸ்திரேலியா அணி இந்தியா வருவது சும்மா தோற்றுப் போவதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை சாத்தி எடுத்தனர். பாகிஸ்தானில் தொடரை வென்றனர். தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்தனர்.
பாட் கமின்ஸ் மற்ற ஆஸ்திரேலியா கேப்டன்கள் போல் அதிகம் சப்தம் போடுபவர் அல்ல, சைலண்ட் கில்லர். ஆஸ்திரேலிய அணியை எந்த வித ஸ்லெட்ஜிங் போன்ற அசிங்கமெல்லாம் இல்லாமல் உள்ளார்ந்த ஒரு ஆக்ரோஷ மனநிலையை வளர்த்து விட்டுள்ளார். இவரது கேப்டன்சியை எதிர்த்து இந்திய அணி சொந்த மண் என்றாலுமே வெல்வது கடினமே. ஆஸ்திரேலியாவின் நவீன ஆக்ரோஷத்தை எதிர்கொள்ள நம் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் போன்ற அலம்பலான ஒரு ஆக்ரோஷம் தேவை. அப்போதுதான் இந்த ஆஸ்திரேலிய அணியை மிரட்ட முடியும்.
சேவாக் ஒரு காலத்தில் ஓப்பனிங்கில் இறங்கி அனைத்து பவுலர்களையும் மிரட்டினார், அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு அவரைப் போன்ற ஒரு ஆக்ரோஷ வீரர் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் ஒரு அரிய ஆக்ரோஷ வீரராக ரிஷப் பந்த்தை கோலி மற்றும் ரவிசாஸ்திரி கூட்டணி உருவாக்கினர். இப்போது அவரோ காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரிதாகக் கிடைத்திருக்கும் ரத்தினமான சூர்யகுமார் யாதவை ரிஷப் பந்த் இடத்தில் பயன்படுத்துவது மிகச்சிறந்த மாற்றாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுநர்களும் கருதுகின்றனர்.
உண்மையில் சேவாக் இடத்தை நிரப்பவே ரோகித் சர்மா டெஸ்ட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வரப்பட்டார், ஆனால் அவரோ தான் ‘சுனில் கவாஸ்கர்’ மண்ணைச் சேர்ந்தவன் என்று டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபான ஆட்டத்தைத் தெரிவு செய்து ஆடி வருகிறார். பலவீனமான தொடக்க வீரர், விராட் கோலியின் ஃபார்ம் இல்லாத நிலை, ஷார்ட் பிட்ச் பந்துகளில் நம்ப முடியாத ஸ்ரேயஸ் அய்யர் போன்ற வரிசையில் புஜாரா மட்டுமே தேறுவார். இந்த முறை புஜாராவை ஒர்க் அவுட் செய்ய திட்டங்களுடன் வந்திருப்பார்கள் ஆஸ்திரேலிய அணியினர். ஸ்ரேயஸ் அய்யருக்கும் திட்டம் வைத்திருப்பார்கள்.
ஆஸ்திரேலியா பயப்படும் விராட் கோலி சரியாக ஆடாமல் போனால் நமக்கு பின்னால் ஒரு ஆக்ரோஷ வீரர் வேண்டும். அதற்கு ரிஷப் பந்த் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய தொடரிலேயே சூரியகுமார் யாதவை சேர்த்தால் நல்லது. ஆனால் திராவிட் மற்றும் ரோகித் கூட்டணி போகிற போக்கு எதுவும் நல்லபடியாகத் தெரியவில்லை. எனவே இந்த மாற்றத்தைச் செய்வார்களா என்பதும் சந்தேகமே.
உண்மையில் இந்த ரீதியில், அதாவது ரிஷப் பந்த்திற்கு மாற்றாக சூர்யகுமார் யாதவை கொண்டு வந்தால் நிச்சயம் பலன் இருக்கும் என்றே தெரிகிறது. சூர்யகுமார் யாதவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட ஆர்வமாக இருக்கிறார். அவரது சமீப ரஞ்சி டிராபி போட்டிகளில் அவர் ஆடும் விதம் உண்மையில் டெஸ்ட் போட்டிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். பரிசீலனை செய்வார்களா திராவிட் மற்றும் ரோகித் கூட்டணி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT