Published : 23 Dec 2016 03:44 PM
Last Updated : 23 Dec 2016 03:44 PM
ஐசிசி விருதுகளில் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் என்று இரட்டை விருதுகளைத் தட்டிச் சென்ற அஸ்வின், முன்னாள் டெஸ்ட் கேப்டன் தோனிக்கு தனது உரையில் நன்றி தெரிவிக்காதது குறித்து தோனி ரசிகர்கள் அஸ்வினை விமர்சித்துள்ளனர், அஸ்வினை ஆதரித்தும் நிறைய ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
ஐசிசி வருடாந்திர விருதுகளில் சச்சின், திராவிட் ஆகியோருக்குப் பிறகு 3-வது வீரராக ஆண்டின் சிறந்த வீரர் விருதை அஸ்வின் பெற்றார். மேலும் ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெற்றார், இந்த அணியைத் தேர்வு செய்தது சங்கக்காரா, ராகுல் திராவிட், கேரி கர்ஸ்டன்.
2016 ஆம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 72 விக்கெட்டுகளை 8 முறை 5 விக்கெட்டுகளுடன் அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.
இந்த விருது அறிவிப்புக்குப் பிறகு இந்திய அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் பேசிய அஸ்வின் தன் குடும்பத்தினருக்கும் அணி வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார், ஆனால் முன்னாள் கேப்டன் தோனிக்கு நன்றி கூறவில்லை என்று தோனி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அஸ்வினுக்கு எதிராக பொங்கியுள்ளனர்.
அஸ்வின் பேசியதாவது:
இந்த அருமையான சாதனைக்காக நான் நிறைய பேர்ககளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகள் மிகச்சிறப்பு, இந்த ஆண்டு இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கவனிக்கத்தக்கது என்னவெனில் நான் பந்து வீசிய விதம், பேட் செய்த விதம், ஒட்டுமொத்தமாக நான் களத்தில் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. இவை அனைத்தையும் விட முக்கியமானது எனது வெற்றிக்குப் பின்னணியில் இருப்பவர்கள்.
இந்த விருதை என் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஐசிசிக்கு நன்றி மிக முக்கியமாக அணியின் சக வீரர்களுக்கு நன்றி. பயிற்சியாளர்களுக்கும் நன்றியைப் பதிவு செய்கிறேன். மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய பிறகு பெரிய மாறுதலைப் பெற்றுள்ளோம். ஒரு இளம் கேப்டன் அவரிடமிருந்து தலைமைத்துவத்தை பெற்றார். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது நம்மிடையே புதிய வீரர்கள் உள்ளனர் என்றார் அஸ்வின்.
இது தொடர்பான ட்வீட்கள் சில:
கவுதம் குமார்: கேப்டனும், லெஜண்டுமான தோனியை புறக்கணித்ததற்கு நன்றி அஸ்வின்!! பழச மறக்காதீங்க அஸ்வின்.
ஷாந்தனு ஷர்மா: யாரால் இவரது கிரிக்கெட் வாழ்வு பிரகாசம் பெற்றதோ அவரை புறக்கணிக்க முயல்கிறார்.. நான் அஸ்வின் ரசிகர்தான் ஆனால் இது அராஜகம்.
சச்சின் உமேஷ்: நன்றியுரையில் தோனி எங்கே?
ஸ்ரீஹரி: இப்போது திசையை மாற்றுகிறீர்கள்! உங்கள் வெற்றியில் தோனியின் பங்களிப்பை மறந்து விட்டீர்கள். வீடியோவில் நீங்கள் தோனியை தரக்குறைவாக்கியுள்ளீர்கள்.
லாவண்யா மோகன்: வாழ்த்துக்கள் அஸ்வின்! தோனியை விட்டுவிட்டீர்கள்.
ஷுபம் தோக்ரா: ஜெம் அஸ்வின் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்ட போது அவரை ஆதரித்ததற்காக தோனி நிச்சயம் இப்போது பெருமையடைந்திருப்பார்.
கவுரவ் ஜெயின்: கோலி/தோனி ஆகியோரினால் அவர் வெற்றியடைந்து விடவில்லை. அவரது வெற்றிக்குக் காரணம் அவரே.
ஷஷி: தோனிக்கு நன்றி கூறாததற்காக டிவிட்டர்வாசிகள் அஸ்வினை சாடுகின்றனர். அவருக்கு எப்போது ஆதரவு தேவைப்பட்டதோ அப்போது தோனி அவரை ஆதரிக்காததற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமா?
கார்த்திக் அஸ்வின்: திராவிட் அணிக்காக நல்ல வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார் என்றால், தோனி வீரர்களிடமிருந்து சிறந்த திறமைகளை வெளிக்கொணர்கிறார்.
சிலிபாயிண்ட்: தோனியை குறிப்பிடாதது குறித்து அவரது ரசிகர்கள் ஏன் காட்டுக்கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் எம்.எஸ்.டி. அவர் எந்த ஒரு புகழுக்கும் ஆசைப்படுபவர் அல்ல. எனவே தோனி ரசிகர்களே அமைதி காக்கவும்.
கிரிக்கெட் டிராக்கர்: அஸ்வின் கிரிக்கெட் வாழ்வில் தோனி ஒரு பெரிய பங்காற்றியுள்ளார் என்று கூறுவதில் தவறில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT