Published : 09 Jan 2023 04:02 PM
Last Updated : 09 Jan 2023 04:02 PM

மறக்கப்பட்ட நிஜ ஹீரோக்கள்: 1975-ல் உலகக் கோப்பையை வென்ற அபார இந்திய ஹாக்கி அணி!

1975-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணி

ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடர் ஒடிசாவில் வரும் 13-ம் தேதி தொடங்கும் வேளையில் 1975-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை மறக்க முடியுமா? ஆனால், தேசிய விளையாட்டு இப்போதுள்ள நிலை கண்ணீர் வரவழைப்பதாகும். அதைவிட வேதனை அளிப்பது அஜித் பால் சிங் தலைமையில் 1975-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அந்த உலகக் கோப்பை மன்னர்களை மக்கள் மறந்து போனதுதான்.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, கபில்தேவ், தோனி, சச்சின், விராட் கோலி ஆகியோரை நினைவில் கொள்ளும் அளவுக்குக் கூட இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியின் பிரதம சாதனையான 1975 உலகக் கோப்பை வெற்றி மறக்கப்பட்டது எப்படி என்பது இன்றும் அதிசயமாகவே உள்ளது. இப்போதைய தலைமுறைகளுக்கு அப்போது உலகிலேயே கடினமான பாகிஸ்தான் அணியை கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-1 என்று அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய அணி வென்றதை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அந்த இறுதிப் போட்டி வெற்றி சாதாரணமானதல்ல.

மார்ச் 15, 1975. அந்த நாளை இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மறக்க முடியாது. ஆம் அன்றுதான் உலகக்கோப்பையில் கோலாலம்பூரில் மெர்டெகா விளையாட்டு மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஹாக்கி இறுதிப் போட்டி நடைபெற்றது.

1975 உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா கடந்து வந்த பாதை: அப்போதைய ஹாக்கி அணிகள் பலம் வாய்ந்தவை. இந்திய அணிக்கு இறுதிக்கு முன்னேறிய பாதை அவ்வளவு எளிதாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக 2-1 என்று போராடியே வென்றது. அப்போதெல்லாம் பெரிய அணியாக இல்லாத ஆஸ்திரேலியாவை போட்டுச் சாத்தாமல் டிரா செய்தனர். கானா அணியை 7-0 என்று வீழ்த்தினர். பிறகு ஒப்புநோக்கில் பலவீனமான அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்ததையும் மறக்க முடியாது.

மேற்கு ஜெர்மனிக்கு எதிராக கடைசி லீக் ஆட்டத்தில் தான் இந்திய அணியின் உண்மையான பலம் வெளிப்பட்டது. வலுவான ஜெர்மனியை 3-1 என்று வீழ்த்தி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இந்தப் பிரிவில் கோல் சராசரியின் படி இந்திய அணி முதலிடத்தில் இருந்தது.

அரையிறுதியில் போட்டாப் போட்டி போடும் வலுவான மலேசியாவுடன் மோத வேண்டிய நிலை. மலேசியாவின் பூன் ஃபூன் லோகே என்பவர் 32-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இந்தியாவினால் மலேசியாவின் தடுப்பு அரணை உடைத்து கோல் போட முடியவில்லை, கடைசி வரையிலும் கூட இந்தியா ஒரு ஷாக் தோல்வியில் வெளியேறும் என்ற அச்சமே இருந்தது. இந்தியாவின் ஷிவாஜி பவார் ஒரு கோலை அடித்து சமன் செய்தாலும் அப்போதைய மலேசிய அணியின் உலக அளவில் சிறந்த வீரரான ஷண்முக நாதன் 42-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து மலேசியாவுக்கு முன்னிலை கொடுத்து அதிர்ச்சியளித்தார். 60-வது நிமிடம் நெருங்கும் வேளையில் இந்தியாவின் கதை முடிந்தது என்றே அன்றைய தினம் வர்ணனையைக் கேட்டவர்கள் வேதனையை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள்.

அப்போதுதான் கடைசி தருணங்களில் இந்தியாவின் மீட்பரான அஸ்லாம் ஷேர் கான் மலேசிய தடுப்பரணில் இடைவெளியைக் கண்டு உள்ளே புகுந்து செல்ல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை வீணாக்காமல் கோல் அடித்தார் அஸ்லாம், 2-2 என்று ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. அப்போது இந்தியாவின் ஹர்சரண் சிங் கோல்டன் கோலை அடிக்க இந்தியா 3-2 என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இறுதிப்போட்டிக்குள் சென்றது.

பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டி மார்ச் 15, 1975 அன்று பெரிய எதிர்பார்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. இப்போது போல் அல்லாமல் அப்பொதெல்லாம் ஹாக்கி மீது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் இருந்தது. அனைவரும் ரேடியோ முன் வர்ணனைக்காக டென்ஷனுடன் காத்திருந்த தருணம். விரலைக் கடித்தபடியே வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பதற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் பாகிஸ்தான் அணியின் முகமது ஜாஹித் ஷெய்க் முதல் கோலை அடித்தார்.

ஆட்டம் சூடுபிடித்தது, மேஜர் தயான்சந்த் மகன் அசோக் குமார் பந்தை வேகமாகக் கொண்டு செல்லும் தருணங்களில் அருமை. ஹிந்தி வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்கின் பந்தை விட வேகமாகச் செல்லும் குரலின் பின்னால் நாமும் ஓடிக்கொண்டிருந்தோம். 44-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியாவின் சுர்ஜித் சிங் கோலாக மாற்றி 1-1 என்று சமன் செய்ய பேரார்வமும் பதற்றமும் அதிகரித்தது. ஏனெனில் பாகிஸ்தான் நிச்சயம் இதற்குப் பதிலடி கொடுப்பார்கள் என்பதே.

ஆனால், 51-வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி மேதை தயான் சந்த் மகன் அசோக் குமார் சிங் பந்தை அருமையாக எடுத்துச் சென்று ஃபீல்ட் கோலாக மாற்ற 2-1 என்று இந்தியா முன்னிலை பெற்றது, ஆனால் இதுவே உலகக்கோப்பையைத் தூக்கும் கோலாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 8 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஒரே உலகக் கோப்பை வெற்றி இது, அதுவும் பாகிஸ்தானை வீழ்த்தி பெற்ற உழைப்பு மிகு வெற்றி என்றால் சும்மாவா!

1975 உலகக் கோப்பையில் இந்தியா வென்றதும் ஹாக்கி உலகில் புல்தரை ஹாக்கியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் 1976-ம் ஆண்டு மாண்ட்ரீல் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் ஆஸ்ட்ரோ டர்ஃப் என்ற புதிய தரை அறிமுகமானது. இந்திய ஹாக்கி அணியின் சரிவும் அப்போது முதல் தொடங்கியது. அதன் பிறகு இந்திய ஹாக்கியின் நிர்வாகக் கோளாறுகளாலும் தேசிய விளையாட்டு என்ற ஒன்றை நசுக்குமுகமாகவும் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டதையடுத்து ஹாக்கி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

இதனை 1975 உலகக் கோப்பை வெற்றி கோலை அடித்த அசோக் குமார் ஒரு கணத்தில் கூறிய போது, “உலகக் கோப்பை ஹாக்கி வெற்றிக் கொண்டாட்டங்களை மறந்து விடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் மார்ச் 15-ம் தேதி இதனை நினைவில் கொள்ள வேண்டியவர்கள் எங்களை மறந்து விடுவதுதான் கொடுமை. மார்ச் 15 அன்று எங்களை அழைத்து வாழ்த்து கூறக்கூட நாதியில்லை. பலருக்கும் இந்தத் தினமே நினவில் இருப்பதில்லை என்று தெரிகிறது. நாம் கிரிக்கெட் பித்து பிடித்த நாடுதானே! எங்களை, 1975 உலகக் கோப்பை ஹாக்கி ஹீரோக்களை யார் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்?” என்று வேதனையுடன் தெரிவித்ததையும் மறக்க முடியாது.

இப்போது 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஜனவரி 13-ம் தேதி உலகக் கோப்பை ஹாக்கி ஒடிசா மாநிலத்தில் தொடங்குகிறது. இந்தியாவுக்கு வெல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x