Published : 09 Jan 2023 02:29 PM
Last Updated : 09 Jan 2023 02:29 PM
இலங்கைக்கு எதிராக 3-வது டி20 போட்டியில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, ஒருமுனையில் ‘அடித்து நொறுக்குவதன்றி வேறொன்றறியேன் பராபரமே’ என்று இலங்கை பந்துவீச்சை புரட்டி எடுத்து 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசி தொடரை வெல்வதற்கு வித்திட்ட இந்தியாவின் ஏ.பி.டிவில்லியர்ஸ், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் நூறாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் என்று கபில் தேவ் புகழ்ந்து, அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் ஒருமுனை, வேறுமுனை என்பது போல் சூரியகுமார் யாதவ் எங்கு போட்டாலும் அடி... எப்படிப் போட்டாலும் அடி என்ற ரீதியில் அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்தார். ஷாட்கள் அப்படி. அதுவும் இருமுறை ஆஃப் திசையில் சாய்ந்து கிட்டத்தட்ட கீழே விழுமாறு சென்று பந்தை பைன்லெக்கில் சிக்சர்களுக்கு விளாசியது சூர்யா ஸ்பெஷல் மற்றும் கண்கொள்ளாக் காட்சி.
7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என்று அவர் விளாசியது இலங்கை கேப்டனைக் கையைப் பிசைய வைக்க, மற்ற இலங்கை வீரர்களே கூட வாயைப் பிளந்து சூர்யாவின் அதிரடியை ரசிக்க நேரிட்டது என்றால் மிகையாகாது. 26 பந்துகளில் சதம் கண்ட சூர்யா, அதன் பிறகு எங்கு போட்டாலும் அடி எப்படிப் போட்டாலும் அடி என்ற ரீதியில் நொறுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எனக்குப் பவுலிங் போட முடியாதுடா என்ற கெத்து அவரது உடல் மொழியில் தெரிந்தது.
டி20 கிரிக்கெட்டையே வேறொரு தளத்துக்கு உயர்த்திவிட்டார் சூர்யகுமார் யாதவ். பொழுது போக்கு வடிவத்தின் அதி பொழுதுபோக்கு பேட்டர் சூர்யகுமார் யாதவ். இவரது ஆட்டத்தைப் பார்க்கவே கூட்டம் இனி சேரும். இவர் ஆட்டமிழந்தால் ஸ்டேடியமே எழுந்து போனாலும் போகும் காலம் ஏற்படும்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற 1983 உலகக் கோப்பை வெற்றி நாயகன் கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியது: “சில சமயங்களில் சூர்யாவின் அதிரடியை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லாமல் போய் விடுகின்றது. சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலியை பார்க்கும்போது, ஏதோ ஒருநாளில் இந்தப் பட்டியலில் சேரும் ஒரு வீரர் நிச்சயம் வருவார் எனறு நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளன. அதுவும் சூர்யா ஆடும் பேட்டிங் பிரமிப்பின் உச்சம்தான். ஃபைன் லெக் மேல் ஆடும் ‘லாப் ஷாட்’, இது பவுலர்களுக்கு கடும் பீதியை கிளப்புகிறது என்றால், பிறகு நின்ற இடத்திலிருந்து மிட் ஆன், மிட்விக்கெட், எஸ்க்ட்ரா கவர், பாயிண்ட், தேர்ட் மேன் என்று சிக்சர்கள் விளாசுவது உண்மையில் பவுலர்களை தொடை நடுங்க வைக்கின்றது.
பவுலர்கள் வீசும் லைன் மற்றும் லெந்தை மிக சூசகமாக, விரைவாக கணிக்கிறார் சூர்யகுமார் யாதவ். கிரேட் பேட்டர்களான டிவில்லியர்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் ஆகியோர்களின் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சூர்யாவைப் போல் இவ்வளவு சுருதி சுத்தமாக விளாசும் வீரரைப் பார்த்ததில்லை. சூர்யகுமார் யாதவுக்கு ஹாட்ஸ் ஆஃப். இவரைப்போன்ற வீரர்கள் நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள்” என்று கூறினார் கபில் தேவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT