Published : 08 Dec 2016 08:43 PM
Last Updated : 08 Dec 2016 08:43 PM

80-களின் மே.இ.தீவுகள் போல் அச்சமூட்டும் 4 வேகப்பந்து கூட்டணியை இறக்க ஆஸி.முடிவு

மே.இ.தீவுகள் என்றாலே ராபர்ட்ஸ், ஹோல்டிங், மார்ஷல், கார்னர் என்று வகைவகையான 4 வேகப்பந்து கூட்டணி நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது.

அதே போன்று ஆஸ்திரேலியாவும் தற்போது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கமின்ஸ், பேட்டின்சன் என்று 4 வேகப்பந்து வீச்சாளர்களை குறைந்தது அடுத்த ஆஷஸ் தொடருக்குள் தயார் செய்து இங்கிலாந்தை மிரட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

இந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களும் டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து விளையாடுவதை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த பயிற்சியாளர் டேரன் லீ மேன், “இவர்கள் நால்வரையும் ஒருசேர பார்ப்பது உற்சாகமளிக்கும். கமின்ஸ், பேட்டின்சன், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய 4 பவுலர்களையும் ஒருசேர மைதானத்தில் பார்ப்பது அனைவரது கனவாக உள்ளது. இந்தக் கூட்டணி அபாரமாக இருக்கும், இது வெஸ்ட் இண்டீஸ் அணி 80களில் இருந்தது போன்று அமையும்” என்றார்.

அடிக்கடி காயமேற்பட்டு வெளியில் இருந்த பேட் கமின்ஸ் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். நல்ல வேகத்திலும் வீசி வருகிறார்.

இவரது பவுலிங் பற்றி குறிப்பிட்ட டேரன் லீ மேன், “மீண்டு வந்து கமின்ஸ் போன்ற ஒரு பவுலர் வேகமாக வீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றும் போது டெஸ்ட் போட்டியில் இவர் உடனடியாக நுழைய வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.

எனவே 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற ஒரு ஐடியாவை செயல்படுத்துவது பற்றி உட்கார்ந்து யோசிக்க வேண்டும்” என்கிறார் டேரன்.

இந்தியத் தொடருக்குள் இது சாத்தியமாகா விட்டாலும் 2017-18 ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்குள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற தனது கனவு நிறைவேறும் என்கிறார் டேரன் லீ மேன்.

ஆனாலும் 70களிலும் 80களிலும் எதிரணி பேட்ஸ்மென்களின் முதுகெலும்பை சில்லிடச் செய்த மே.இ.தீவுகளின் அசுர வேகப்பந்து கூட்டணி ஏற்படுத்திய அதே பயமூட்டும் மனநிலையை இந்தக் கால பேட்ஸ்மென்களிடம் இவர்கள் உருவாக்க முடியுமா என்பது கேள்வியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x