Published : 07 Jan 2023 07:11 PM
Last Updated : 07 Jan 2023 07:11 PM
சிட்னி: மழையால் பாதிக்கப்பட்ட சிட்னி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான சனிக்கிழமை ஆஸ்திரேலியா 475/4 என்று டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 195 ரன்கள் இருந்த நிலையிலேயே டிக்ளேர் செய்தார் கமின்ஸ். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இந்த பேட்டிங் பிட்சிலும் அட்டகாசமாக வீசிய கேப்டன் கமின்ஸிடம் விக்கெட்டுகளை இழந்து 149/6 என்று 4-ம் நாள் முடிவில் பரிதாபமான நிலையில் இருந்தது.
முதலில் கவாஜா 195 ரன்களில் இருந்த போது கமின்ஸ் டிக்ளேர் செய்கிறார் என்றால், அதற்கு கவாஜாவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம். இங்கெல்லாம் முடியுமா? இரட்டைச் சதம் அடிக்க விடாமல் டிக்ளேர் செய்து விட்டார் இவருக்குப் பொறாமை, அவருக்கு கொழுப்பு என்றெல்லாம் கதைக் கட்டத் தொடங்கி விடுவார்கள். ஆனால் ஒரு அணியாக வெற்றி வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதுதான் கேப்டன் என்பவரது பொறுப்பு, இதனாலேயே கவாஜாவின் இரட்டைச்சதத்தைப் பறித்த காரணத்தினாலேயே கமின்ஸ் ஒரு கேப்டன்/வேகப்பந்து வீச்சாளராக உண்மையில் டெஸ்ட் போட்டியின் ஆகச்சிறந்த ஒரு வேகப்பந்து வீச்சை வீசினார்.
இதனையடுத்து இன்னும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு வெற்றி வாய்ப்பையும் 3-0 ஒயிட் வாஷ் வெற்றியையும் கமின்ஸ் சாத்தியமாக்கியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியும் ஒரு காப்பி குடிக்கும் நேரத்தில் ஆல் அவுட் ஆகிவிடும் போல்தான் இருக்கின்றது. 4 செஷன்கள் முழுக்க மழையால் காலியான பிறகும் இந்த டெஸ்ட்டில் வெல்ல முடியும் என்று உறுதியாக ஆடுவதுதான் ஆஸ்திரேலியாவின் தனிச்சிறப்பு.
ஹென்ரிச் கிளாசன் (2), காயா சோண்டோ (39), பார்மில் இருக்கும் கைல் வெரைனா (19) ஆகியோர் விக்கெட்டுகளை சடுதியில் கமின்ஸ் ஓர் அற்புதமான ஸ்பெல்லில் வீழ்த்த பாலோ ஆனைத் தவிர்க்கவே இன்னும் 127 ரன்கள் தேவை அதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து நிற்கிறது தென் ஆப்பிரிக்கா.
ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பிரமாதமான பவுலிங்கை வீசினார் கமின்ஸ். ஷார்ட் பால்களாக வீசி சோண்டோவை ஒர்க் அவுட் செய்து பிறகு அட்டகாசமான ஃபுல் லெந்த் பந்தை வீசி எல்.பி.செய்தார். தேவையில்லாமல் ரிவியூ செய்து விரயம் செய்தார் சோண்டோ. உடனேயே 7 அடி உயர மார்க்கோ யான்செனையும் எல்.பி.ஆக்கியிருப்பார், ஆனால் இம்முறை பந்து வெளி லைனில் பிட்ச் ஆனது. அதேபோல் வெரைனாவுக்கு ஓவர் த ஸ்டம்பில் வந்து பிரமாதமான லெந்த் பந்தை வீசி வெளியே எடுத்தார். எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. முன்னதாக 2019-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு அழைக்கப்பட்ட ஹென்ரிச் கிளாசனுக்கு பயங்கரமான பவுன்சரைப் போட்டு காலி செய்தார் கமின்ஸ். மார்புயரம் வந்த பந்துக்கு இரண்டு கால்களையும் தூக்கி தடுக்க முயன்றார் கிளாசன் ஆனால் பந்து கிளவ்வில் பட்டு லெக் திசையில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது.
ஸ்காட் போலண்ட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மிகப்பிரமாதமாக வீசினாலும் முக்கிய பவுலர் ஹேசில்வுட் வந்தவுடன் அவருக்கு வழி விட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹேசில்வுட் தன் பங்குக்கு கேப்டன் டீன் எல்கர் (15)விக்கெட்டை இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி வீழ்த்தினார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து குத்தி எழுப்ப டீன் எல்கர் அதை புல் ஆடவும் முடியாமல் தடுத்தாடவும் முடியாமல் என்னவோ செய்ய விக்கெட் கீப்பர் கேரி எம்பிப்பிடித்தார் கேட்சை. எல்கருக்கு இது மறக்கப்பட வேண்டிய தொடர் ஆனது. 5 இன்னிங்ஸ்களில் வெறும் 46 ரன்களே எடுத்துள்ளார்.
வழக்கம்போல் பவுமாதான் நன்றாக ஆடினார், அவர் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டிடம் காலியானார். இவர்தான் ஆக்ரோஷமாக கொஞ்சமாவது ஆடினார், நேதன் லயனை இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஆனால் நிற்க முடியவில்லை, ஆஸ்திரேலிய ஆக்ரோஷம் அந்த மாதிரி இருந்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் சைமன் ஹார்மர் 6 ரன்களுடனும் மார்க்கோ யான்சென் 10 ரன்களுடனும் இருக்கின்றனர். தென் ஆப்பிரிக்கா 149/6.
ஞாயிற்றுக்கிழமை 5-ம் நாளில் 98 ஓவர்களை தென் ஆப்பிரிக்கா சமாளிக்க வேண்டும். இப்போதைய நிலவரப்படி 3-0 ஒயிட் வாஷ் தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தவே செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT