Published : 30 Dec 2016 04:00 PM
Last Updated : 30 Dec 2016 04:00 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு பற்றி யோசனை எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்ட்டிற்கு முன்னதாகவே அவர் ஓய்வு அறிவிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது, அப்படியில்லையெனில் இந்தத் தொடர் முடிந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.
மெல்போர்ன் தோல்வி, தொடர் தோல்வியானதையடுத்து பாகிஸ்தானின் மிகச்சிறந்த வெற்றி கேப்டனான மிஸ்பா கூறியதாவது:
ஓய்வு பெறுவது குறித்து நான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அணிக்கு பங்களிப்பு செய்ய முடியாதபோது ஆடி என்ன பயன் என்பதை எப்போதும் நான் மனதில் இருத்தி வந்துள்ளேன். தற்போது இதற்கான நேரம் வந்துள்ளது. சிட்னி டெஸ்டிற்கு முன்னதாகவே கூட ஓய்வு பெறுவேன், அல்லது தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுவேன்.
அடுத்த 2 நாட்கள் இதைப்பற்றித்தான் நான் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் அணியில் சும்மா விளையாடுவதில் பயனில்லை. சிட்னியில் ஆடுவது பற்றி இன்னும் நான் முடிவெடுக்கவில்லை, பார்ப்போம்.
நான் நீண்டநாட்களாகவே ஓய்வு குறித்து பரிசீலித்தே வந்துள்ளேன். துபாயில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடும்போதே நான் ஓய்வு குறித்து யோசித்தேன். பிறகு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடக்கும் என்று ஆவலாக இருந்தேன். இந்தியாவுக்கு எதிராக ஆடிவிட்டு அத்துடன் ஓய்வு பெறலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என கடினமான தொடர்கள் இருந்ததால் ஓய்வு பெறுவது சரியாகாது என்று நினைத்தேன். 6-7 ஆண்டுகளாக அணியை நல்ல நிலைக்கு முன்னேற்றியுள்ளேன்.
சில கடினமான தருணங்களில் எனது ஷாட் தேர்வினால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தவறான நேரத்தில் தவறான ஷாட். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு இது மிகவும் வலியைத் தருகிறது. மூத்த வீரராக இத்தகைய ஆட்டம் என்னை காயப்படுத்துகிறது, எனக்கு பொறுப்புகள் அதிகம். எப்போதெல்லாம் சரியாக ஆட முடிவதில்லையோ அப்போதெல்லாம் நான், அணியின், ரசிகர்களின், ஏன் எனது எதிர்பார்ப்புகளையே பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. இத்தகைய சோபிக்காத ஆட்டத்திற்காகவா கிரிக்கெட் ஆட முடியும்? கடினமான தருணங்களில் எழுந்து போராட வேண்டும், எனவே எனக்கு என் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது, ஏமாற்றமாக உள்ளது..
இவ்வாறு கூறினார் மிஸ்பா உல் ஹக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT