Published : 02 Jan 2023 05:58 PM
Last Updated : 02 Jan 2023 05:58 PM

குரு வணக்கம் | அச்ரேக்கரின் நினைவு நாளில் சச்சின் டெண்டுல்கர் புகழஞ்சலிப் பகிர்வு

சச்சின் மற்றும் அச்ரேக்கர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், தனது குருவான அச்ரேக்கரின் நினைவு நாளான இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1989 முதல் 2013 வரை விளையாடியவர் சச்சின். சுமார் 24 ஆண்டு காலம் தனது பேட்டால் கிரிக்கெட் களத்தை ஆட்சி செய்தவர். இதன் மூலம் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34,357 ரன்களை குவித்துள்ளார். இதில் 100 சதங்களை விளாசி உள்ளார். 201 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சச்சின் இப்படி பல சாதனைகள் புரிந்தாலும், அதற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது அச்ரேக்கரின் பயிற்சிதான். சச்சினின் முதல் கிரிக்கெட் பயிற்சியாளரும் அச்ரேக்கர்தான். அவரிடம் சச்சின் பயிற்சி பெற துவங்கியபோது அவருக்கு வயது வெறும் 10 தான்.

முதல் வாய்ப்பில் தனது பயிற்சியாளர் அச்ரேக்கரை சச்சின் இம்ப்ரஸ் செய்ய தவறினார். ஆனால், இரண்டாவது வாய்ப்பில் தனது திறன் மூலம் கவர்ந்துவிட்டார். அதன்பிறகு அனைத்துமே வரலாறாக மாறியது. மும்பையின் சிவாஜி பார்க்கில் சச்சின் கிரிக்கெட்டில் பால பாடம் பயின்றார். கிரிக்கெட்டின் யுக்திகளை அவரிடம் கற்று தேர்ந்தார். காலை, மாலை என அச்ரேக்கர் அவருக்கு தீவிர பயிற்சி கொடுத்தார்.

சச்சினின் ஸ்டம்புகளை தகர்க்கும் பவுலருக்கு 1 ரூபாய் நாணயத்தை பரிசாக கொடுக்கும் வழக்கம் கொண்டவராம் அச்ரேக்கர். ஒருவேளை அவரை யாரும் அவுட் செய்யவில்லை எனில் அந்த நாணயம் சச்சினுக்கு சேருமாம். பின்னர் 16 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து குருவுக்கு பெருமை தேடி தந்தார்.

கடந்த 2019, ஜனவரி 2-ம் தேதியன்று வயது மூப்பினால் அவர் காலமானார். அவரது இறுதிப் பயணத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். குருவுக்கான தனது நினைவேந்தலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் சச்சின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x