Published : 02 Jan 2023 01:23 PM
Last Updated : 02 Jan 2023 01:23 PM
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிக் பாஷ் டி20 ஆஸ்திரேலிய லீக் போட்டியில் பிரிஸ்பன் ஹீட் வீரர் மைக்கேல் நெசர், சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர் ஜோர்டான் சில்க் என்ற வீரருக்கு பவுண்டரியில் பிடித்த பிரமிப்பூட்டும் கேட்ச் அனைவரையும் அசத்தியிருந்தாலும் இப்படி எல்லாம் பிடித்தால் அது கேட்சா? என்ன ஒரு வரைமுறை இல்லையா என்ற சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பிரிஸ்பன் ஹீட் அணி 20 ஓவர்களில் 224 ரன்களைக் குவிக்க சிட்னி சிக்சர்ஸ் அணி அதை பரபரப்பாக விரட்டிக் கொண்டிருந்த போது ஜோர்டான் சில்க் (23 பந்தில் 41, பிரிஸ்பன் ஹீட் பவுலர் மார்க் ஸ்டெகிடீ வீசிய பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார், பந்து சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது, ஆனால் பவுண்டரி அருகே நின்று கொண்டிருந்த மைக்கேல் நெசர் பந்தை கேட்ச் எடுத்து விட்டார். ஆனால் எல்லைக் கோட்டைப் பந்துடன் கடந்து விடுவோம் என்று தெரிந்த அவர் பந்தை லேசாக மேலே விட்டெறிந்தார் ஆனால் அதுவும் எல்லைக் கோட்டைக் கடந்து விட்டது ஆனால் காற்றில்தான் இருந்தது, நெசர் எல்லை தாண்டிய நிலையிலேயே மேலே எழும்பி பந்தைப் பிடித்து அப்படியே அந்தரத்தில் இருந்த படியே பந்தை மைதானத்திற்குள் மேலே விட்டெறிந்தார். பிறகு எல்லைக் கோட்டை வெளியிலிருந்து தாண்டி உள்ளே வந்து காற்றில் இறங்கிய பந்தைப் பிடித்தார்.
இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்படுகிறது எனில், பந்துடன் அவரது முதல் தொடர்பு எல்லைக் கோட்டுகுள் தான் இருந்தது, பிறகு அவர் எல்லை தாண்டினாலும் பந்து எல்லை தாண்டினாலும் காற்றில்தான் இருந்தது, மீண்டும் அவர் எல்லையைத் தாண்டியிருந்த நிலையில் பந்தைப் பிடித்து எல்லைக்கோட்டுக்குள் எறிந்த போதும் அவரது கால்கள் காற்றில்தான் இருந்தது, பிறகு மீண்டு வந்து பிடித்த போதுதான் அவர் கால் தரையில் பாவியது, ஆகவே பந்துடனான முதல் தொடர்பும் எல்லைக்கோட்டுக்குள்தான், 2வது தொடர்பும் எல்லைக்கோட்டுக்குள் தான் என்று விளக்கமளிக்கப்பட்டு கேட்ச் என்றும் அவுட் என்றும் தீர்ப்பானது. நெசரின் அதி சாமர்த்தியமான உடனடி சமயோசிதம் கைகொடுத்ததைப் பலரும் பாராட்டினாலும் இப்படியெல்லாம் பிடித்தால் அது கேட்ச்சா? என்ற சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.
இது குறித்து மைக்கேல் நெசர் கூறும்போது, “மேட் ரென்ஷா 2 ஆண்டுகளுக்கும் முன்பாக இதே போன்று ஒரு கேட்சை எடுத்தார். இப்போது விதிமுறைகள் மாறியிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது எனவே நானும் அப்படிச் செய்தேன், கடவுளுக்கு நன்றி விதிமுறைகள் மாறவில்லை” என்றார்.
கேட்ச் கரெக்ட்தான், அவுட்டும் கரெக்ட்தான், ஆனால் இதை அனுமதிக்கலாமா என்பதுதான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. இதனை அனுமதிக்கக் கூடாது என்ற கட்சியினர் கூறுவது என்னவெனில் பீல்டர், பந்து இரண்டுமே பவுண்டரிக்கோட்டை கடந்து விட்டதே, பின் எப்படி இப்படி கேட்ச்சை அனுமதிக்க முடியும் என்கின்றனர். ஆனால் எம்சிசி விதிமுறைகளோ பந்துடன் தொடர்பில் இருக்கும் போது எல்லைக்கோட்டுக்குள் இருந்தால் போதும் என்கிறது. இதன் படி நெசர் கேட்ச் அட்டகாசமான சமயோசித கேட்ச்.
அநேகமாக ஐசிசி உலகக்கோப்பை 2023-க்குள் இப்படிப்பட்ட கேட்ச்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே தெரிகிறது. பந்தை எல்லைக்கோட்டுக்குள் பிடிக்க முயன்று பந்தை எல்லைக் கோட்டுக்குள்ளேயே காற்றில் தூக்கி விட்டு பிறகு உள்ளே வந்து பிடிப்பதை ஏற்கலாம். ஆனால் பேலன்ஸ் இல்லாமல் பந்தை தூக்கி எறியும் போதும் பந்தும் எல்லைக்கோட்டைக் கடந்து விட்டது, பீல்டரும் எல்லைக் கோட்டை கடந்து விட்டார் எனும்போது ஒரு ஜம்ப் எப்படி தீர்மானிக்க முடியும்? என்பதே கேள்வி. கேட்சும் அட்டகாசம்தான், அது செல்லாது, இதை அனுமதிக்கக் கூடாது என்ற வாதமும் சரியானதுதான், ஐசிசி என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
பிரிஸ்பன் ஹீட் 224 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய சிட்னி சிக்சர்ஸ் 209 ரன்கள் வரை வந்து போராடித் தோற்றது. கேட்ச் நாயகனான மைக்கேல் நெசர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
வைரல் கேட்ச் வீடியோ:
This is fascinating.
Out? Six? What's your call? #BBL12 pic.twitter.com/v22rzdgfVz— KFC Big Bash League (@BBL) January 1, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment