Published : 02 Dec 2016 05:36 PM
Last Updated : 02 Dec 2016 05:36 PM

இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில்

உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார்.

சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன?

மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை அவர் தெரிவிக்க ஊடகங்களைத் தேர்ந்தெடுத்தது வருத்தத்திற்குரியது. எனினும் இது குறித்து அவரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

பிப்ரவரி 2014-ல் ஷெபீல்ட் ஷீல்டில் அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்த மேக்ஸ்வெல் அதன் பிறகு சதம் எடுக்கவில்லை. ஆனல் யார்க்‌ஷயருக்காக முதல்தர கிரிக்கெட்டில் 140 ரன்களை ஒரு போட்டியில் எடுத்திருந்தார் மேக்ஸ்வெல்.

ஆனால் இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது, ஒருநாள் கிரிக்கெட்டுக்காக ஆஸ்திரேலியா அணிக்கு ஆடும் மேக்ஸ்வெல் உள்நாட்டு கிரிக்கெட்டை முழுமையாக ஆட முடிவதும் இல்லை என்பதே அது.

எது எப்படியிருந்தாலும் மேக்ஸ்வெல்லின் அதிருப்தி அணித்தேர்வாளர்களுக்கும் உள்நாட்டு அணி நிர்வாகத்திற்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x