Published : 30 Dec 2022 10:13 PM
Last Updated : 30 Dec 2022 10:13 PM
டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையின் முடிவு வெளியாகி உள்ளது. அதில் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டு நார்மலாக இருப்பதாக தகவல். இதனை விளையாட்டு செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே வெள்ளி அன்று காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை அந்த காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் மூட்டில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து டேராடூன் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் அவரது மூளை மற்றும் முதுகுத்தண்டு நார்மலாக இருப்பதாக தகவல்.
அவரது கணுக்கால் மற்றும் முழங்கால் பகுதியில் வலி இருக்கின்ற காரணத்தாலும், வீக்கம் உள்ளதாலும் அதற்கான எம்ஆர்ஐ ஸ்கேன் நாளை மேற்கொள்ளப்படும் என மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT