Published : 29 Dec 2022 10:05 PM
Last Updated : 29 Dec 2022 10:05 PM
துபாய்: ஐசிசி டி20 கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். நான்கு வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் வெளியாக தொடங்கி உள்ளன. வரும் 30-ம் தேதி வரையில் இந்த பரிந்துரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் கரன் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ்: இந்திய அணி சார்பில் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள ஒரே வீரர் அவர் மட்டும்தான். 2022-ல் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 1,164 ரன்களை அவர் குவித்தார். நடப்பு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவர்தான். மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 9 அரைசதம் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.56. ஸ்ட்ரைக் ரேட் 187.44. மொத்தம் 17 கேட்ச்களை பிடித்துள்ளார். 68 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இவரது அன்-ஆர்தாடக்ஸ் ஷாட்கள் மிகவும் பிரபலம்.
ஐசிசி டி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார். அதே போல ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்கான பரிந்துரையில் பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, மேற்கிந்திய தீவுகளின் ஷாய் ஹோப் இடம் பிடித்துள்ளனர். இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை.
What an incredible shortlist for ICC Men's T20I Cricketer of the Year 2022
More on their achievements https://t.co/TOiHUHq59Y#ICCAwards pic.twitter.com/Hrs83CnWHL— ICC (@ICC) December 29, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT