Published : 29 Dec 2022 02:48 PM
Last Updated : 29 Dec 2022 02:48 PM

17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

மெல்போர்ன்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

மெல்போர்ன் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை 2-வது இன்னிங்ஸிலும் சொற்பமாக 204 ரன்களில் சுருட்டி ஆஸ்திரேலியா 182 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதமுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய மண்ணில் 2005-06ல் நடந்த டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றுத் தருணமாகும்.

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது, ஆனால் அவையெல்லாம் வேறு அணி இப்போது இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்தில் இருக்கும் அணியாகும் எனவே 4வது தொடர் வெற்றி சாத்தியமில்லாமல் போனது.

சிட்னியில் அடுத்த டெஸ்ட் நடைபெறுகிறது, இதில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கும். இல்லை உதை என்றால் வெளியேறி விடும் என்றே தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரே ஆறுதல் 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக 200 ரன்களுக்கும் கீழ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஒரு தரக்குறைவான சாதனைக்கு இந்த இன்னிங்ஸில் 204 ரன்கள் எடுத்து முற்றுப்புள்ளி வைத்தது. தெம்பா பவுமா (65 ரன்கள்) மட்டுமே அரைசதம் கடந்தார். இந்தத் தொடரில் ஓரளவுக்கு சீரான முறையில் ஆடும் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெரைனா 40 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 63 ரன்களைச் சேர்த்ததுதான் ஒரே அரைசதக் கூட்டணியாகும்.

உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன், 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. ஸ்காட் போலண்ட் 2 விக்கெட், ஆனால் பாட் கமின்ஸ் பந்து வீச்சை சிறப்பானது என குறிப்பிட்டே ஆக வேண்டும். 16 ஓவர்கள் வீசி 8 மெய்டன்கள் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இவரது கேப்டன்சி அட்டகாசமாக இருந்தது. அதுவும் சாரல் எர்வி, மார்க்கோ யான்செனுக்கு டி.ஆர்.எஸ். கோரியது உண்மையில் அபாரமானதாகும். கடைசியில் ஸ்டீவ் ஸ்மித் லுங்கி இங்கிடியை பவுல்டு செய்தது வெற்றிக்கான தருணமாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் சாதாரண பவுலிங்கில் ஆட்டமிழந்தனர், 2 ரன் அவுட்கள் அவர்களது சிங்கிள் எடுக்கும் முடிவை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும் ஷாட் தேர்வில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சோடைபோயினர். உதாரணமாக அலட்சியமாக ஆடி அவுட் ஆவதற்கு டீன் எல்கரின் அவுட்டை குறிப்பிடலாம் இந்த தொடரில் 2வது முறையாக அவர் நேற்று லெக் திசையில் செல்லும் பந்தை தொட்டு அவுட் ஆனார். இப்படித்தான் மற்றவர்களும் சுலபமாக ஒர்க் அவுட் செய்யப்பட்டு ஆஸ்திரேலிய பவுலர்களால் காலி செய்யப்பட்டனர்.

உத்தி, மனநிலை என்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு அணியை மறுகட்டுமானம் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. 3ம் நிலையில் இறங்கும் வீரர் எப்போதும் வலுவான வீரராக இருக்க வேண்டும் எந்த அணியிலுமே 3ம் நிலை வீரர் வலுவாக இருப்பது அவசியம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் வான் டெர் டுசன் மற்றும் இந்த டெஸ்ட்டில் ஆடிய டி ப்ருய்ன் ஆகியோருக்கு உத்தி என்பது சுத்தமாகவே இல்லை. கன்னாபின்னாவென்று பந்துகளை டி ப்ருய்ன் எட்ஜ் செய்தார். எத்தனைப் பந்துகள்தான் ஸ்லிப்பில் பீல்டருக்கு முன்னால் விழும்? ஒரு எட்ஜ் ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது.

யான்சென் முதல் இன்னிங்ஸில் அரைசதம் எடுத்தார். ஆனால் 2வது இன்னிங்சில் எல்.பி.ஆகி வெளியேறினார், பாட் கமின்ஸின் ரிவியூ ஸ்பாட் ஆன். ஜோண்டோ, ட்ராவிஸ் ஹெட்டின் அற்புதமான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அதே போல் கேஷவ் மகராஜ் கமின்ஸ் பந்தை அடித்து விட்டு 3வது ரன்னுக்காக ஓடும் போது ரன் அவுட் ஆனார். 69வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 204 ஆல் அவுட். டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா கேப்டன் சரியான புரிதலை வெளிப்படுத்தினார். ஒன்று தன் அணி வீரர்களின் அனுபவமின்மையைக் குறிப்பிட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பேட்டர்கள் சிலரை இழந்து விட்டோம் என்று கூறும்போது நமக்கே வேதனையாகத்தான் இருந்தது. இந்தத் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்கா 40 விக்கெட்டுகளை இழந்துள்ளது, ஆஸ்திரேலியா 22 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x