Published : 28 Dec 2022 08:40 PM
Last Updated : 28 Dec 2022 08:40 PM

Rewind 2022 | மெஸ்ஸி முதல் கோலி வரை: விளையாட்டு உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும்

கடிகார முள்ளை விட வேகமாக சுழன்று ஆண்டின் இறுதியை எட்டியுள்ளது 2022. இந்த ஓராண்டில் விளையாட்டு உலகில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை நினைவுகூர்வோம்.

டென்னிஸ் விளையாட்டில் தொடங்கி அப்படியே கிரிக்கெட், காமன்வெல்த் போட்டிகள், குத்துச்சண்டை, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை, கால்பந்து உலகக் கோப்பை என கோலாகலமாக இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது. வழக்கம்போலவே விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்த ஆண்டு சரியான ட்ரீட்டாக அமைந்துள்ளது. இடையில் முன்னணி வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வின் மூலம் ‘குட்-பை’ சொல்லியுள்ளனர். தவிர்க்க முடியாத இழப்பையும் விளையாட்டு உலகம் எதிர்கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து: கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நெதர்லாந்து. அதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது தென் ஆப்பிரிக்க அணி. கிரிக்கெட் உலகில் இந்த ஆண்டின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

கம்பேக் கொடுத்த எரிக்சன்: கடந்த 2021 ஜூனில் நடைபெற்ற யூரோ கோப்பைத் தொடரில் டென்மார்க் கால்பந்தாட்ட அணியின் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அசைவற்று கிடந்த அவரை முதலுதவி சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர் மருத்துவ உதவியாளர்கள். அதன் பின்னர் அண்மையில் முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சுமார் 528 நாட்களுக்கு பிறகு அவர் களம் திரும்பி கவனம் ஈர்த்தார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது இங்கிலாந்து. இதன் மூலம் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை தன்வசம் வைத்துள்ள அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது. அதோடு ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது அந்த அணி. பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் கரன், ப்ரூக், மொயின் அலி, லிவிங்ஸ்டன், வோக்ஸ், ரஷீத் என தரமான வீரர்களை கொண்டுள்ளது அந்த அணி.

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ளது. இருந்தாலும் அந்த அணி விளையாடிய தொடரின் முதல் போட்டியை சவுதிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா இழந்தது. இது கால்பந்தாட்ட உலகில் சவுதியின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

37 தொடர் வெற்றிகளை பெற்ற இகா ஸ்விடெக்: போலந்து நாட்டின் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்விடெக் தொடர்ச்சியாக 37 வெற்றிகளை பெற்று அசத்தி இருந்தார். 21-ம் நூற்றாண்டின் சிறந்த தொடர் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் தொடங்கி ஜூன் வரையில் சுமார் 135 நாட்களுக்கு தனது வெற்றி நடையை அவர் தொடர்ந்தார்.

டி-ஷர்ட்டை கழற்றி சுழற்றிய இங்கிலாந்து கால்பந்து வீராங்கனை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மகளிர் யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் அணிக்காக இரண்டாவது கோலை தான் பதிவு செய்ததை கொண்டாடும் விதமாக தனது டி-ஷர்ட்டை கழற்றி சுழற்றியபடி மைதானம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தார் இங்கிலாந்து வீராங்கனை க்ளூய் கெலி (Chloe Kelly). அவரது அந்தப் புகைப்படம் மகளிருக்கான அதிகாரத்தின் அடையாளம் என கருதி உலக அளவில் பெண்கள் பலரும் அப்போது போற்றி இருந்தனர். 56 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அரங்கில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி வென்ற முதல் சாம்பியன் பட்டம் அது.

ஆடை கட்டுப்பாட்டை தளர்த்திய விம்பிள்டன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி இருந்தார் உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்கு அந்த அனுமதியை வழங்கும் வகையில் ஆடை கட்டுப்பாட்டை விம்பிள்டன் நிர்வாக அமைப்பு தளர்த்தி இருந்தது.

டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பால் ரிங்கிற்குள் சரிந்து விழுந்த குத்துச்சண்டை வீரர் உயிரிழப்பு: குத்துச்சண்டை போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த மூசா யமக் (Musa Yamak) என்ற வீரர், மாரடைப்பு காரணமாக ரிங்கிற்குள் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.

தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அவர், துருக்கி நாட்டில் பிறந்தவர். அவர் விளையாடிய 75 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியைத் தழுவியது இல்லை என தகவல். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன், மரணமும் பேர் இடியாக இந்த ஆண்டு அமைந்தது.

ஃபார்முக்கு திரும்பிய கோலி: கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் இந்திய வீரர் கோலி. அவர் மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்தார். இது சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகவும், ஆதராகவும் குரல்கள் எழுந்தன. இந்த சூழலில் ஆசியக் கோப்பை தொடரில் அரை சதம் மற்றும் சதம் என விளாசி இழந்த ஃபார்மை மீட்டெடுத்தார். தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் ரன் வேட்டையை தொடர்ந்தார். கடந்த 2019-க்கு பிறகு முதல் முறையாக சதம் விளாசி இருந்தார் அவர்.

ஓய்வு பெற்ற வீரர்கள்: டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றார். அவருக்கு சக வீரர்கள் பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி இருந்தனர். இதே போல பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டலும் ஓய்வு பெற்றார்.

உலகக் கோப்பையை முத்தமிட்ட மெஸ்ஸி: கால்பந்து என்றால் அந்த விளையாட்டு குறித்து அறியாதவர்கள் கூட மெஸ்ஸியின் பெயரை உச்சரிப்பார்கள். அந்த அளவுக்கு அவர் பிரபலம். பல கோப்பைகளை கிளப் மற்றும் சர்வதேச அளவில் வென்ற அவர் இறுதியில் உலகக் கோப்பையை தன் தாய் நாடான அர்ஜென்டினாவுக்காக வென்று கொடுத்தார்.

நடப்பு ஆண்டில் மெஸ்ஸி, 49 போட்டிகளில் விளையாடி 35 கோல்கள் பதிவு செய்துள்ளார். 33 முறை சக வீரர்கள் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்துள்ளார். அதன் மூலம் 2022-ல் அதிக கோல்கள் பதிவு செய்த டாப் 5 வீரர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கிக் கொண்டார் அவர்.

2022-ல் இந்தியாவின் சாதனைகள்

  • ஈட்டி எறிதலில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று சாதித்தார் நீரஜ் சோப்ரா. அதே போல டைமண்ட் லீக் தொடரில் பட்டம் வென்று அசத்தினார்.
  • காமன்வெல்த் போட்டிகளில் 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.
  • காமன்வெல்த் லான் பவுல்ஸ் விளையாட்டில் நால்வர் பிரிவில் மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது. பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் இந்தியா தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில் லான் பவுல்ஸ் வெற்றி சர்ப்ரைஸ் கொடுத்தது.
  • தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பையை முதல் முறையாக வென்றது இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி.
  • உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன். அவர் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார்.
  • ப்ரோ லீக் தொடரில் வாகை சூடியது இந்திய மகளிர் ஹாக்கி அணி.
  • சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியன் கார்ல்சனை மூன்று முறை வீழ்த்தினார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
  • பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது இந்திய அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x