Published : 27 Dec 2022 04:31 PM
Last Updated : 27 Dec 2022 04:31 PM
மெல்பேர்ன்: தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தச் சூழலில் சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன் என புகழ்ந்துள்ளார் அவரது மனைவி கேண்டிஸ் வார்னர்.
36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான மெல்பேர்ன் போட்டியையும் சேர்த்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 8000-க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 254 பந்துகளில் 200 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரது 100-வது டெஸ்ட் போட்டியை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மைதானம் வந்திருந்தனர். அவரது ஆட்டத்தை அவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
“மிகவும் பெருமையாகவும், நிம்மதியாகவும் உள்ளது. அவருக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் அனைவரும் சொல்லி வந்தார்கள். ஆனால் இந்தப் போட்டியில் அவர் 8000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு அவர் இரட்டை சதமும் விளாசியுள்ளார்.
தனது ஆதரவாளர்கள் மற்றும் தன்னை விரும்புபவர்களுக்கு முன்னர் இதை செய்தது அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். அவரை எண்ணி நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். அவர் சிறந்த அப்பா, சிறந்த கணவர், சகோதரர், மகன் என நாங்கள் அனைவரும் சொல்வோம்” என கேண்டிஸ் வார்னர் தெரிவித்துள்ளார்.
.@Mel_Mclaughlin catches up with an 'incredibly proud' @CandiceWarner31 after David's century #AUSvSA pic.twitter.com/YlDHoZ6qHV
— 7Cricket (@7Cricket) December 27, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT