Published : 27 Dec 2022 12:06 AM
Last Updated : 27 Dec 2022 12:06 AM
இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது.
30 வயதில் இந்திய அணியின் ஜெர்சியை அணிய தொடங்கிய சூர்யகுமார் இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 டி20 வீரர்.
ஐசிசி-யின் டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்தார். சூப்பர் 12 சுற்றில் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற சிறந்த பங்களிப்புகளை வழங்கி புகழின் உச்சிக்கு சென்றார். டிவில்லியர்ஸ்க்கு பிறகான 360 டிகிரி வடிவிலான சூர்யாவின் ஆட்டம் இந்திய ரசிகர்கள் மனதில் அவரை நீங்கா இடம் பிடிக்க வைத்துள்ளது.
இதனிடையே, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள சூர்யகுமார் யாதவ் தனது 360 டிகிரி டெக்னிக் எப்படி வந்தது என்பது பற்றி விளக்கியுள்ளார்.
"இது ஒரு சுவாரஸ்யமான கதை. பள்ளி, கல்லூரி நாட்களில் நான் ரப்பர் பால் கிரிக்கெட் தான் அதிகம் விளையாடுவேன். நல்ல மழை காலங்களில் கடினமான சிமெண்ட் தளங்களே எங்களின் மைதானங்கள். அப்போது பந்துகள் 15 யார்டு தொலைவில் இருந்து வீசப்படும். 15 யார்டு தொலைவு மட்டுமே என்பது அதிவேகமாகவே பந்து எறியப்படும். 140+ ஸ்பீடு எப்படியும் இருக்கும். மைதானத்தில் லெக் சைட் பவுண்டரி எல்லை 95 யார்டுகளாக இருந்தால், ஆஃப்-சைட் பவுண்டரி எல்லை 25-30 யார்டு தொலைவு மட்டுமே இருக்கும்.
எனவே ஆஃப்-சைட் பவுண்டரி அடிப்பதை தடுப்பதற்காக, என் உடலை குறிவைத்தே பெரும்பாலும் பவுலிங் செய்யப்படும். அப்படி வரும் பந்துகளை, என் மணிக்கட்டுகளை சுழற்றி உப்பர் கட் ஷாட் அடிப்பது உடம்பை வளைத்து விளையாடுவது என ஷாட்களை அடித்து பவுண்டரியாக்குவேன். இப்படியே 360 டிகிரி ஆட்டம் எனக்கு பழகியது. வலைப்பயிற்சியின்போது நான் இதை கற்றுக்கொள்ளவில்லை. வலைப்பயிற்சிகளில் எப்போதும்போல சாதாரணமாகவே விளையாடுவேன்" இவ்வாறு விளக்கியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT