Published : 26 Dec 2022 04:23 PM
Last Updated : 26 Dec 2022 04:23 PM
மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று தொடங்கிய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்தது கைகொடுக்க தென் ஆப்பிரிக்கா 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேமரூன் கிரீன் போன்ற பவுலரிடம் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது, ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 45 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது.
வார்னர் 32 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் நாளை 2ம் நாளில் ஆட்டத்தை தொடர இருக்கின்றனர். பாட் கமின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் பிட்சில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது குறித்து வர்ணனையாளர்களிடம் கடும் விமர்சனங்களை ஈர்த்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் கமின்ஸ் முடிவு சரிதான் என்பதை நிரூபித்தது.
யான்சென் 59 ரன்களும், விக்கெட் கீப்பர் வெரைனா 52 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 112 ரன்களை 6-வது விக்கெட்டுக்காக சேர்க்கவில்லை எனில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 7-வது முறையாக தொடர்ந்து 200 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்கா சுருண்டுள்ளது.
உணவு இடைவேளைக்கு முன்பாக 58/2 என்று இருந்து மார்னஸ் லபுஷேனின் அட்டகாசமான த்ரோவில் டீன் எல்கர் (26 ரன்கள்) ரன் அவுட் ஆக, அடுத்த பந்தே பவுமா (1 ரன்) ஸ்டார்க் பந்தில் அவுட் ஆக தென் ஆப்பிரிக்கா உணவு இடைவேளைக்கு முன்பு 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளை முடிந்த பிறகு ஜோண்டோ (5 ரன்கள்) ஸ்டார்க் பந்தை காற்றில் அடிக்க மிட் ஆஃபில் மார்னஸ் லபுஷேன் அட்டகாசமாக டைவ் அடித்து கேட்சை எடுத்தார், பிரமிப்பூட்டும் கேட்ச் அது.
இந்த கேட்ச், பீல்டிங்கெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்தது பாட் கமின்ஸின் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியது. ஆஸ்திரேலியா பீல்டிங்கும் டீன் எல்கர் ரன் அவுட், ஜோண்டோவின் கேட்ச் போக மற்றபடி கேட்ச்களைக் கோட்டை விடுவதாகத்தான் இருந்தது.
ஆனால் கேமரூன் கிரீன் போன்ற ஒரு சேஞ்ச் பவுலரிடம் 5 விக்கெட்டுகளை கொடுக்கும் அணியே தென் ஆப்பிரிக்கா என்பதை பாட் கமின்ஸ் உணர்ந்ததால்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்காவை 189 ரன்களுக்குச் சுருட்டினார்.
முதலில் எல்கருக்கு 7 ரன்களில் கேட்ச் விடப்பட்டது. பிறகு இவருக்கே 19 ரன்களில் கிரீன் கேட்சை விட்டார். ஸ்காட் போலண்டின் சாதாரண பந்தை எட்ஜ் செய்து எர்வீ ஆட்டமிழந்தார். 16 இன்னிங்சில் 10-வது முறையாக இப்படி ஆட்டமிழக்கிறார் எர்வீ. வான் டெர் டியுசனுக்கு பதிலாக இறங்கிய டி புருய்ன் இறங்கி கிரீனை 2 நேர் பவுண்டரிகளை விளாசினார். ஆனால் இதே கிரீன் பந்தில் புல் ஷாட் ஆடப்போய் டாப் எட்ஜில் கேட்ச் ஆனார். எல்கரும், தெம்பா பவுமாவும் இணைந்தனர். ஆனால் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றியது ஆஸ்திரேலியா.
மிட்செல் ஸ்டார்க் பந்தை டீன் எல்கர் மிட் ஆஃபில் மார்னஸ் லபுஷேனுக்கு வலது புறம் தட்டி விட்டு ஒரு ரன்னுக்காகப் பாய்ந்தோடி வந்தார். ஆனால் மார்னஸ் லபுஷேன் அட்டகாசமாக பந்தை எடுத்து ஸ்டம்பில் நேராக அடித்தார். டீன் எல்கர் ரன் அவுட். அடுத்த பந்தே தெம்பா பவுமா ஸ்டார்க் பந்திற்கு மட்டையை பந்து போகும் வழியில் தொங்க விட எட்ஜ் ஆனார்.
அதன் பிறகுதான் ஜோண்டோ அவுட் ஆக, வெரைனாவும் மார்க்கோ யான்செனும் சேர்ந்து 112 ரன்களைச் சேர்த்தனர், இதில் யான்சென் உடம்பெல்லாம் அடி வாங்கி விழுப்புண்களுடன் வீர தீரம் காட்டி அரைசதம் கண்டார். 37 ரன்களில் இருந்த போது யான்சென் ஆட்டமிழந்திருக்க வேண்டும் ஆனால் கமின்ஸ் பந்தில் இவர் ஆடிய புல் ஷாட்டை கவாஜா கேட்சை விட்டார்.
யான்சென், வெரைனா இருவரும் 112 ரன்களைச் சேர்த்து அடுத்தடுத்து காலியாக, ரபாடாவை கிரீன் பவுல்டு செய்ய, மஹராஜை லயன் வீழ்த்த இங்கிடியை கிரீன் பவுல்டு செய்ய 179 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து தென் ஆப்பிரிக்கா 189 ரன்களுக்குச் சுருண்டது. கேமரூன் கிரீன் 10.4 ஓவர் 3 மெய்டன், 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது முதலாம் 5 விக்கெட் ஆகும் இது. ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் போலண்ட், லயன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா இன்னிங்ஸைத் தொடங்கிய போது வார்னருக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியெ 6 பந்துகளையும் வீசி ரபாடா சொதப்பினார். இதனால் வார்னர் தன் 100வது டெஸ்ட் போட்டியில் பெரிய இன்னிங்ஸுக்கு அடித்தளமாக 32 நாட் அவுட், லபுஷேன் 5 நாட் அவுட் என்ற நிலையில் நாளை 2ம் நாள் ஆட்டத்தில் களமிறங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT