Published : 26 Dec 2022 03:47 PM
Last Updated : 26 Dec 2022 03:47 PM
வங்கதேசத்துடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 2-வது இடத்தில் உள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரது அபார ஆட்டத்தால் 314 ரன்களை குவித்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் இந்திய அணி 37 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. அக்சர் படேல் 26, ஜெயதேவ் உனத்கட் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் 10 ரன்கள் சேர்த்த நிலையில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் உனத்கட். இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாட முயன்று ஆட்டமிழந்தார். 13 பந்துகளில் அவர் 9 ரன்கள் சேர்த்தார். 3-ம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அக்சர் படேல் அடுத்த விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் 34 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து மோசமான நிலைக்குச் சென்றது.
இதையடுத்து 8-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயஸ் ஐயரும், ரவிச்சந்திரன் அஸ்வினும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி பின்னர் அதிரடி காட்டினர். இருவரும் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 47 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் 46 பந்துகளில் 29 ரன்களும், அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்களையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
3 விக்கெட் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. 2-வது டெஸ்டில் அணியின் வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். புஜாரா தொடர் நாயகனாக தேர்வானார்.
புதிய சாதனை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள், 400 விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்யும் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.
டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள், 3 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை இதற்கு முன்பு கபில்தேவ், ஷான் பொல்லாக், ஷேன் வார்னே, சர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய 5 வீரர்கள் மட்டுமே செய்திருந்தனர். இந்த சாதனையை நேற்று செய்து 6-வது நபராக பட்டியலில் இணைந்துள்ளார் அஸ்வின்.
8-வது விக்கெட்டுக்கு அதிக ரன்: 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர்-அஸ்வின் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு கூட்டாக 71 ரன்கள் எடுத்தனர். 4-வது இன்னிங்ஸின் போது இந்திய அணியின் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோராகும் இது. இதற்கு முன்பு 1932-ல் இந்திய வீரர்கள் எல்.அமர்சிங் - லால் சிங் ஜோடி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 74 ரன்கள் குவித்திருந்தது. 2-வதாக தற்போது ஐயர் - அஸ்வின் ஜோடி 71 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கபில் தேவ் - எல்.சிவராமகிருஷ்ணன் ஜோடி கொழும்பில் இலங்கைக்கு எதிராக 1985-ல் 70 ரன்கள் குவித்திருந்தது.
தப்பிப் பிழைத்த அஸ்வின்: 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் களம் புகுந்த அஸ்வின் ஒரு ரன் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் தவறவிட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அஸ்வின் சிறப்பாக விளையாடி பந்துகளை பறக்கவிட்டார். 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்வின் 4 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். கண்டத்திலிருந்து தப்பிய அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்... - வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தனது வெற்றி சதவீதத்தை இந்திய அணி அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
இன்று ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கி உள்ளது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு பிரகாசமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT