Published : 25 Dec 2022 07:25 AM
Last Updated : 25 Dec 2022 07:25 AM
மிர்பூர்: வங்கதேசத்துடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிவருகிறது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிவிளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்றகணக்கில் இழந்த இந்திய அணி, முதல் டெஸ்டில் அபாரவெற்றியைப் பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்போட்டி மிர்பூரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரிஷப் பந்த் (93), ஸ்ரேயஸ் ஐயர் (87) ஆகியோரது அரை சதத்தால் 314 ரன்களை எட்டியது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷண்டோ 5 ரன்களில் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல், முகமது சிராஜ், உனத்கட், அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரது அபாரமான பந்துவீச்சால் வங்கதேச விக்கெட்கள் விழுந்து கொண்டே இருந்தன. லிட்டன் தாஸ் 73, நுருல் ஹசன் 31, தஷ்கின் அகமது 31 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்களையும், சிராஜ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், உமேஷ் யாதவ்,உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்கத்தில் கேப்டன் கே.எல். ராகுலை, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்திய அணி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுப்மன் கில் 7, சேதேஸ்வர் புஜாரா 6, விராட்கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 37 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து தத்தளித்தது. ஆட்ட நேரஇறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்கப்போராடிக் கொண்டிருந்தது. அக்சர் படேல்26, ஜெயதேவ் உனத்கட் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் 145 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது இந்திய அணிக்கு கடினமான விஷயமே என்றுகிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் மட்டுமே தேவை.
2-வது இன்னிங்ஸில் மெஹிதி ஹசன் 3, ஷகிப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கோலியின் மோசமான சராசரி: விராட் கோலி 2022-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மோசமான சராசரியைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் அவர் சராசரியாக ஒரு இன்னிங்சில் 26.50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 2020-ல் சராசரியாக 19.33 ரன்களையும், 2011-ல் சராசரியாக 22.44 ரன்களையும், 2021-ல் சராசரியாக 28.21 ரன்களையும் அவர் எடுத்துள்ளார். 2012 முதல் 2019-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் அவர் சராசரியாக 40-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்திருந்தார். இந்த ஆண்டில் அவர் மோசமான ஃபார்மில் இருப்பது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து தடுமாறும் கேஎல் ராகுல்: ரோஹித் ஷர்மா காயமடைந்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்றுள்ள கேஎல் ராகுல், 2வது இன்னிங்சில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான பார்மை தொடர்கிறார். கடந்த 6 இன்னிங்சில் அவர் 12, 10, 22, 23, 10, 2 என்ற வீதத்தில் ரன்களை எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT