Published : 22 Dec 2022 03:16 PM
Last Updated : 22 Dec 2022 03:16 PM
டாக்கா: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் இந்திய அணியின் பவுலர் ஜெயதேவ் உனத்கட். சுமார் 12 ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கடந்த 2010-ல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார்.
31 வயதான உனத்கட் இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்க கடந்து வந்தது ஐபிஎல் போன்ற பூப்பாதை அல்ல. அது உள்ளூர் கிரிக்கெட் எனும் சிங்கப் பாதையை கடந்து வந்து கொடுக்கப்பட்ட கம்பேக். இந்திய அணியில் மிக இளம் வயதில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம், 2013-ல் ஒருநாள் மற்றும் 2016-ல் டி20 கிரிக்கெட் அறிமுகம் அவருக்கு அமைந்தது. இடது கை பவுலர். ஆனால், அந்த வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. அதனால் அவர் மனம் தளரவில்லை.
உள்ளூர் கிரிக்கெட்டில் அதிதீவிரமாக விளையாடினார். அண்மையில் முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை படைத்தார். மொத்தம் 19 விக்கெட்டுகள். அது தவிர சவுராஷ்டிரா அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார்.
96 முதல் தர போட்டிகளில் விளையாடி 353 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அதேபோல 116 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
தற்போது வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற அவர், இந்த பார்மெட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இது 12 ஆண்டு கால காத்திருப்புக்கு கிடைத்த பலனாகும். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் (இதுவரை) 16 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT