Published : 22 Dec 2022 10:08 AM
Last Updated : 22 Dec 2022 10:08 AM
இந்தியாவின் வங்கதேச தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் மிர்பூர் பிட்ச் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்று கூறும் கேப்டன் கே.எல்.ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி நாயகனான குல்தீப் யாதவ்வை இந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்தது ஏன் என்பது குறித்து இப்போது பல கேள்விகள் எழுந்துள்ளன,
ஏற்கெனவே கவாஸ்கர் தன் கடும் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டார். இது இன்னும் சர்ச்சைகளைக் கிளப்பும் ஏனெனில் இந்தப் பிட்சில் ஜெயதேவ் உனாட்கட்டை அணியில் எடுத்திருப்பதே.
சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன், ஆனால் இந்த டெஸ்ட்டில் பிட்ச் எப்படி இருந்தாலும் அவரைப்போய் உட்கார வைப்பதை யாராலும் ஜீரணிக்கவே முடியாது, அதைவிடக் கொடுமை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தன் 2வது டெஸ்ட் போட்டியில் ஆட குல்தீப் யாதவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை அணியில் தேர்வு செய்திருப்பது.
2010 வங்கதேசத் தொடரிலும் இதே போல் அமித் மிஸ்ரா பிரமாதமாக வீசி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அரைசதமும் அடித்த அமித் மிஸ்ரா அப்போது அடுத்ததான மிர்பூர் டெஸ்ட் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். காரணமும் கூறப்படவில்லை. இதெல்லாம் இந்திய அணியின் தேர்வு நடைமுறைகளின் விநோதங்கள்.
இன்று டாஸ் போட்டவுடன் ஷாகிப் அல் ஹசன் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார், ராகுலிடம் கேட்ட போது தானும் பேட் செய்திருப்பேன் என்று கூறியதோடு, பிட்ச் பற்றிக் கேட்ட போது, “எனக்கு இந்தப் பிட்ச் குழப்பமாக இருக்கிறது, பிட்ச் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை, அதைக் கணிக்க நிபுணர்கள், பயிற்சியாளர்கள் என்று அனுபவஸ்தர்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன், குல்தீப் யாதவ்வுக்குப் பதிலாக ஜெய்தேவ் உனாட்கட் வந்துள்ளார், குல்தீப் மீதான மிகக் கடினமான முடிவே இது. அஸ்வின், அக்சர் ஸ்பின்னுக்குப் போதும் என்று நினைக்கிறோம், உனாட்கட் வந்தது அனைத்துப் புலங்களையும் ‘கவர்’ செய்யும்” என்கிறார் ராகுல்.
ஒரு கேப்டன் பிட்ச் பற்றி தெரியவில்லை, பயிற்சியாளர்கள், நிபுணர்களின் முடிவுக்கு விட்டுவிடும் ஒருவர் களத்தில் எப்படி கேப்டன்சி செய்ய முடியும்? இது முதல் கேள்வி. இரண்டாவது, பிட்சைப் பற்றியே ஒன்றும் தெரியவில்லை என்று கூறும் ஒருவர், பிட்சை கணிக்க முடியாத ஒரு சர்வதேச அணியின் கேப்டன் எப்படி கடந்த போட்டியின் ஆட்ட நாயகனான குல்தீப் யாதவை அணியிலிருந்து நீக்கி அவருக்குப் பதில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டி ஒன்றில் நிரூபிக்காத உனாட்கட்டைக் கொண்டு வர முடியும்?
மூன்றாவது, பிட்சைப் பார்த்த சஞ்சய் மஞ்சுரேக்கர், வாசிம் ஜாஃபர், சுனில் கவாஸ்கர் போன்றோர் 3 ஸ்பின்னர்களுக்கான பிட்ச் இது என்று கூறும்போது ராகுல் கூறும் அனுபவஸ்தரான, நிபுணரான பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஏன் குல்தீப் யாதவ்வை வைத்துக் கொள்ளுமாறு ராகுலுக்கு அறிவுறுத்தவில்லை?
ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டு, மீண்டும் வந்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்த குல்தீப் போன்ற இளம் வீரர்களுக்கு மனம் என்ன பாடுபடும்? இது ராகுல் திராவிட்டுக்குப் புரியுமா? கே.எல்.ராகுலுக்குப் புரியுமா? உண்மையில் ட்ராப் செய்யப்படவேண்டியவர் கே.எல்.ராகுல்தான். அவர் நன்றாக ஆடும் குல்தீப் யாதவ்வை ட்ராப் செய்யும் பதவியில் இருக்கிறார் என்றால் இதற்கு என்ன பொருள்?
ஒருநாள், டி20 என்று ரோஹித் சர்மா-ராகுல் திராவிட் கூட்டணி தன் செலக்ஷன் விநோதங்களை நடத்திக் காட்டியது என்று டெஸ்ட்டில் நிலையான ஒரு அணியை உருவாக்குவார்கள் என்று பார்த்தால் டெஸ்ட்டிலும் இவர்கள் லீலா விநோதங்கள் தொடர்வதை ஒருவரும் கேள்வி கேட்க மாட்டார்களா என்ற ஆதங்கமே ரசிகர்களிடத்தில் தலைதூக்குகிறது. மேலும் இங்கிலாந்து அணியில் 18 வயது ஸ்பின்னர் ரேஹன் அகமதுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தானை முடக்கி இங்கிலாந்தின் ஒயிட் வாஷ் வெற்றிக்கு வித்திட்டது நடக்கிறது. இங்கு நன்றாக வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் நீக்கப்படுகிறார். இதென்ன நகைமுரண்?
முதல் டெஸ்ட் போட்டியிலேயே பல களவியூக அமைப்புகளையும் பந்து வீச்சு மாற்றங்களையும் அறிவுறுத்தியது விராட் கோலி தான் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் கூட சிராஜ், உமேஷ் பந்துகள் எட்ஜ் ஆகிறது என்று கூடுதல் ஸ்லிப் பீல்டரை கொண்டுவரச் சொன்னதும் விராட் கோலிதான். பின் ராகுல் எதற்குக் கேப்டன்? என்ன கேப்டன் அவர்? இவரது போதாமைகளை பட்டியலிட முடியும் எனும்போது இவர் எப்படி குல்தீப் யாதவை உட்கார வைக்க முடியும்?
தென் ஆப்பிரிக்கா தொடரில் புவனேஷ்வர் குமார் 47 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பிறகு சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் ட்ராப் செய்யப்பட்டார். புஜாரா ஸ்லோ ஸ்கோரர் என்று காரணமில்லாமல் ட்ராப் செய்யப்பட்டார். கே.எல் ராகுல் சொல்லி சொல்லி சொதப்பினாலும் நீடிக்கிறார், ரஹானே பாவம் வெளியே இருக்கிறார். சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால், போன்றோருக்கு வாய்ப்புகள் இல்லை. பிசிசிஐ தலைமை இதற்கெல்லாம் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT