Published : 18 Dec 2022 11:40 PM
Last Updated : 18 Dec 2022 11:40 PM
லுசைல்: கத்தார் நாட்டில் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த போட்டிதான் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 120 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சரி சமமாக 3-3 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதனால் போட்டியில் முடிவை எட்ட பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது.
முன்னதாக, இந்த போட்டியின் முதல் 120 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி சார்பில் மெஸ்ஸி 2 கோல்களை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு கோல் பெனால்டியில் பதிவு செய்யப்பட்டது. அர்ஜென்டினா அணிக்காக மற்றொரு கோலை டி மரியா பதிவு செய்திருந்தார்.
பிரான்ஸ் அணிக்காக மூன்று கோல்களையும் எம்பாப்பே பதிவு செய்திருந்தார். அதில் இரண்டு கோல்கள் பெனால்டி வாய்ப்பில் பதிவு செய்யப்பட்டவை. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர் ஆனார் அவர். இந்த போட்டியின் முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. கூடுதல் நேரமாக விளையாடப்பட்ட 30 நிமிடத்திலும் தலா ஒரு கோலை இரு அணிகளும் பதிவு செய்தன.
பெனால்டி ஷூட்-அவுட்டிலும் கோல் பதிவு செய்து கலக்கிய மெஸ்ஸி - எம்பாப்பே
பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்ஸ் அணி முதலில் ஷூட் செய்தது. எம்பாப்பே எந்த தவறும் செய்யாமல் முதல் கோலை பதிவு செய்தார். மறுபக்கம் மெஸ்ஸி தன் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இருந்தும் அதற்கடுத்த வாய்ப்புகளை பிரான்ஸ் வீண் செய்தது. ஆனால், அர்ஜென்டினா வீரர்கள் பந்தை வலைக்குள் மிக சுலபமாக தள்ளிக் கொண்டிருந்தனர். முடிவில் 4-2 என பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் மார்டினஸ் சிறப்பாக பிரான்ஸ் வீரர்கள் ஷூட் செய்த ஷாட்களை தடுத்து அசத்தி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT