Published : 18 Dec 2022 03:49 PM
Last Updated : 18 Dec 2022 03:49 PM

866 பந்துகளில் ஒரு டெஸ்ட் போட்டியே முடிந்தது... - தென் ஆப்பிரிக்காவை 2 நாட்களுக்குள் நொறுக்கிய ஆஸ்திரேலியா!

பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவை 2 நாட்களுக்குள் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் மொத்தமே 144.2 ஓவர்கள்தான் வீசப்பட்டது, அதற்குள் டெஸ்ட் போட்டியே முடிந்து விட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகக்குறைந்த பந்துகள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டியாகும் இது.

இதற்கு முன்னர் 1931/32-தொடரில் அப்போதும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மொத்தமே 656 பந்துகளில் ஒரு டெஸ்ட் போட்டியே முடிந்து போனது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 153 ரன்களை மட்டுமே எடுத்தது, ஆனால் தென் ஆப்பிரிக்கா அப்போது முதல் இன்னிங்சில் 36 ஆல் அவுட், 2வது இன்னிங்சில் 45 ஆல் அவுட். அதற்குப் பிறகு இப்போது வரலாறு திரும்பியது. ஆனால் இந்த முறை 866 பந்துகள் வீசப்பட்டன.

முதல் இன்னிங்ஸில் 152 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா, பிறகு ஆஸ்திரேலியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்குச் சுருட்டியது. ரபாடா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மார்க்கோ யான்சென் 3, நார்க்கியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா கிரீன் டாப் பிட்சின் ஈரப்பதம் காய்ந்து பந்துகள் இன்னும் எகிற கடுமையாகத் தடுமாறி 99 ரன்களுக்குச் சுருண்டது. கமின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் ஸ்டார்க், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் சாய்த்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் ஸோண்டா அதிகபட்சமாக 36 ரன்களை எடுக்க தெம்பா பவுமா மீண்டும் பொறுப்புடன் ஆடி 29 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 34 ரன்கள்தான், ஆனால் அங்குதான் ரபாடாவின் அபாரப் பந்து வீச்சு பேசியது. இன்னும் 60 ரன்கள் கையிலிருந்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றியைக் கூட ஈட்டியிருக்கும் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது, இதைத்தான் தோல்விக்குப் பிறகும் கூட தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் கூறினார்.

அதாவது கவாஜாவுக்கு ஒரே ஏத்து அவர் கல்லியில் கேட்ச் ஆகி 2 ரன்களில் வெளியேற, டேவிட் வார்னருக்கு ஒரு பந்து குட்லெந்தில் பிட்ச் ஆகி வார்னர் ஒன்றுமே செய்யவில்லை, பந்து தானாகவே எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் ஒரு அருமையான கவர் ட்ரைவ் பவுண்டரி அடித்து அடுத்த ரபாடா பந்திலேயே அப்பர் கட் அடிக்கப் போய் விக்கெட் கீப்பர் வெரைனாவிடம் கேட்ச் ஆகி வெளியேற அடுத்த பந்தே ட்ராவிஸ் ஹெட் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடுகிறேன் பேர்வழி என்று விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் ஆகி லெக்திசைப் பந்தில் வெளியேறினார், ரபாடா பந்து வீச்சில் பொறி பறந்தது. லபுஷேன் 5 நாட் அவுட் 2 முறை பயங்கர பவுன்சர் பவுண்டரிக்குச் செல்ல ஆஸ்திரேலியா 35/4 என்று வெற்றி பெற்றது. ரபாடா 4 ஓவர் 1 மெய்டன் 13 ரன்கள் 4 விக்க்கெட்டுகள்.

ஆஸ்திரேலியாவில் மிகக்குறைந்த ஓவர்களில் முடிந்த 2வது டெஸ்ட் ஆகும் இது. பிட்ச் ஒருதலைப்பட்சமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது என்று குற்றம்சாட்டினாலும் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டில் மட்டும் 200 ரன்களுக்குக் கீழ் 8 முறை ஆட்டமிழந்துள்ளது, இதற்கு பிட்சைக் குறைகூறிப் பயனில்லை, நல்ல டெஸ்ட் வீரர்கள் இல்லாததையே இது காட்டுகிறது. தென் ஆப்பிரிக்கா இந்த படுதோல்விக்குப் பிறகு ஒரு டெஸ்ட்டிலாவது இந்தத் தொடரில் வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கான தகுதிப்போட்டியில் நிற்கும்.

இன்று காலை ட்ராவிஸ் ஹெட் சதம் எடுக்க முடியவில்லை. 96 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து லெக் திசையில் விக்கெட் கீப்பர் வெரைனாவிடம் கேட்ச் கொடுத்து யான்செனிடம் வீழ்ந்தார். கேமரூன் கிரீன் (18), அலெக்ஸ் கேரி (22), ஸ்டார்க் (14) பங்களிப்பு செய்ய ஆஸ்திரேலியா 218 ரன்கள் என்று 66 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால் 2வது இன்னிங்சைத் தொடங்கி தென் ஆப்பிரிக்கா ஆடும்போது பிட்ச்சில் பந்துகள் எகிறின, ஸ்டார்க்கின் வேகம், கமின்சின் பவுன்ஸ், போலண்டின் துல்லியம் எல்லாம் சேர்ந்து 66 ரன்கள் முன்னிலையை எடுப்பதற்குள்ளேயே தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது, எப்படியோ திக்கி முக்கி 99 ரன்களை எடுத்தது. ஆனால் அதன் பிறகு 34 ரன்கள் வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா எடுப்பதற்குள் பிடித்து ஆட்டிப்படைத்து விட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி பெற்ற சந்தோஷத்தையே குலைத்தனர் தென் ஆப்பிரிக்கா பவுலர்கள், குறிப்பாக ரபாடா, நார்க்கியா.

அடுத்த டெஸ்ட் போட்டியிலும் இதே கிரீன் டாப் பிட்ச்சா இல்லை. பிரவுன் பிட்சா என்பதைப் பொறுத்து முடிவுகள் மாறலாம். ஆட்ட நாயகனாக ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x