Published : 18 Dec 2022 03:07 PM
Last Updated : 18 Dec 2022 03:07 PM

இந்தியா பெரிய வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட வாய்ப்பு

சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5-ம் நாளான இன்று வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேச அணி இன்று காலை தன் 2-வது இன்னிங்ஸில் போராடி 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த டெஸ்ட்டில் பேட்டிங்கில் முக்கியக் கட்டத்தில் 40 ரன்களை எடுத்ததோடு 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மீட்டெழுச்சி கண்ட குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த டெஸ்ட் இந்திய அணியின் ஒரு முழு நிறைவான ஆட்டமாக அமைந்தது. புஜாரா இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசத்தி தன் அதிவேக சதத்தையும் எடுத்தார். சுப்மன் கில் தன் டெஸ்ட் சதம் மூலம் சதக்கணக்கை தொடங்கியுள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அபாரமாக ஆடினார். குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அக்சர் படேலின் பந்துகள் இந்த பஞ்சு மிட்டாய் பிட்சிலும் திரும்பியது ஆச்சரியமாக இருந்தது. சிராஜ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் இன்று முதல் விக்கெட்டாக மெஹதி ஹசன் மிராஸை பெவிலியன் அனுப்பியது இந்திய வெற்றியைத் துரிதப்படுத்தியது.

272/6 என்று தொடங்கிய வங்கதேச அணியின் மீதமுள்ள 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி 12 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்ததால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி 13 டெஸ்ட்களில் 9 வெற்றி ஒரு தோல்வி, 3 ட்ராக்களுடன் 120 புள்ளிகளுடன் 76.92% என்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்க, இந்திய அணி வங்கதேசத்தை பெரிய வெற்றி பெற்றதன் மூலம் 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 ட்ரா என்று 87 புள்ளிகளுடன் 55.77% எடுத்து 2-ம் இடத்தில் உள்ளது. 3ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா 54.55% உடன் உள்ளது. 53.33% உடன் இலங்கை 4ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன வங்கதேசத்துக்கு 513 ரன்கள் என்பது இமாலய இலக்குதான். ஆனால் பிட்ச் பஞ்சு மிட்டாய் கணக்காக ஆகிவிட அவர்கள் கொஞ்சம் போராடினார்கள். அறிமுக தொடக்க வீரர் ஜகீர் ஹசன் அற்புதமான ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். வங்கதேசத்தின் எதிர்கால ஸ்டார் இவர் என்றால் மிகையாகாது. இன்று மெஹதி ஹசன் பாசிட்டிவ் ஆக சிராஜை பவுண்டரியுடன் தொடங்க ஷாகிப் அல் ஹசன் அக்சர் படேலை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் விளாசினார். ஆனால் டூ மச் ஆக்ரோஷம் தேவையில்லை என்று தெரியாமல் சிராஜை மீண்டும் தூக்கி அடிக்கிறேன் என்று பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அக்சர், சிராஜ் போன்றோரை ஷாகிப் அல் ஹசன் பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் பெர்சனல் பார்மைத் தேற்றிக் கொண்டார். 8வது விக்கெட்டுக்காக தைஜுல் இஸ்லாம் (4) உடன் சேர்ந்து ஷாகிப் அல் ஹசன் 37 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். இந்த 37 ரன்கள் கூட்டணியில் அனைத்து ரன்களும் ஷாகிப் அடித்ததே. வங்கதேச ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 108 பந்துகளில் 84 ரன்கள் என்று 77.77 என்ற ஒருநாள் போட்டி ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.

ஆனால், குல்தீப் யாதவ் ஒரு பந்தை காற்றில் மிக மெதுவாக வீச, ஷாகிப் அல் ஹசன் மட்டையையெல்லாம் சுற்றி முடித்தவுடன் அவர் கண்ணெதிரிலேயே பந்து ஸ்டம்பைத் தாக்கியது. தைஜுல் இஸ்லாமை அக்சர் படேல் வீழ்த்த எபதத் ஹுசைனை குல்தீப் காலி செய்தார். வங்கதேசம் 324 ரன்களுக்குச் சுருண்டது.

அடுத்த டெஸ்ட் போட்டி மிர்பூரில் டிசம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் அதாரிட்டியுடன் ஆட வேண்டியுள்ளது. ரோஹித் சர்மா வந்து விட்டால் சுப்மன் கில்லை உட்கார வைப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், எனவே செலக்‌ஷன் தலைவலி நிச்சயம் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x