Published : 17 Dec 2022 03:00 PM
Last Updated : 17 Dec 2022 03:00 PM
பிரிஸ்பனில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. முன்னதாக கிரீன் டாப் பிட்சில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு மடிந்தது.
மைதானத்தின் பச்சைப்பசேல் வெளிக்கும் பிட்சுக்கும் வித்தியாசமே தெரியாத ஒரு விதமான கிரீன் டாப் பிட்ச் இது. ஆனாலும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மேட்சில் போடப்பட்டது போல் அவ்வளவாக பவுன்ஸ் இல்லை. ஆனால் பந்துகள் பாய்ந்தன. ட்ரைவெல்லாம் ஆடினால் எட்ஜ்தான். ஆனால் கொஞ்ச நேரம் நின்று ஆடினால் ஒருவேளை பேட்டிங் எளிதாகியிருக்கலாம். இது போன்ற பிட்ச்களில் முக்கியமான விஷயம் என்னவெனில் பந்தின் பளபளப்பு நீண்ட நேரம் இருக்கும் என்பதுதான். இதனால்தான் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.
கிரீன் டாப்பில் ஆட முடியாமல் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 5வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களுக்கும் குறைவாக ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவும் பேட்டிங்கில் முதல் பந்திலேயே எகிறும் பந்திற்கு வார்னர் விக்கெட்டை டக்கில் ரபாடாவிடம் இழந்து 27/3 என்று பிறகு தடுமாறியது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் நெருப்புப் பந்து வீச்சை தன் தீப்பொறி பேட்டிங்கினால் எதிர்கொண்டு 77 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 78 ரன்கள் என்று கிரீசில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் (36) மற்றும் ஹெட் இணைந்து 117 ரன்களை 23 ஓவர்களில் ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் வெளுத்துக் கட்டி சேர்த்து ஆஸ்திரேலியாவைக் கரை சேர்த்தனர்.
தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் இருவரும் லைன் அண்ட் லெந்த்தை பராமரிக்கத் தடுமாறினர், இல்லையெனில் ஷார்ட் பிட்சாக வீசினர். இப்படி லைனுக்குத் திணறி வந்த போதுதான் டீன் எல்கர் 3 ரன்களில் ஸ்டார்க் வீசிய லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அனாவசியமாக தொட்டு விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார். வான் டெர் டுசன் இறங்கி 5 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்தார்.
அதற்குள் கமின்ஸ் தன் லெந்த்தைக் கண்டுப்பிடிக்க, ஒரு பந்து கிரீன் டாப்புக்கே உரிய தன்மையில் பேக் ஆஃப் லெந்தில் பிட்ச் ஆகி சுருக்கென்று எட்ஜ் எடுத்து கேரி கையில் போய் உட்கார்ந்தது. மற்றொரு தொடக்க வீரர் சரல் எர்வி இரண்டு அருமையான நேர் ட்ரைவ்களை நேர் நடுவருக்கு இருபுறமும் அடித்தார், அட்டகாசமான ஷாட்களுடன் 10 ரன்களில் இருந்த போது ஸ்காட் போலண்ட் வீசிய ஃபுல் லெந்த் பந்தை ட்ரைவ் ஆடப்போய் கல்லியில் கிரீனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கயா ஜோண்டோ என்ற வீரர் அடுத்ததாக ஸ்காட் போலண்டின் இன்ஸ்விங்கரில் நேராக கால்காப்பில் வாங்கி வெளியேற 27/4 என்று 11 ஓவர்களில் தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.
விக்கெட் கீப்பர் கைல் வெரைனாவும் தெம்பா பவுமாவும் இணைந்தனர், இவர்கள் இருவரும் கடுமையான தாக்குதல் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடினர், ஆனால் பவுமா தைரியமாக ஆடி நிறைய விரைவு சிங்கிள்களை எடுத்து ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்த படியே ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றினார். கீப்பர் கைல் வெரைனா, கேமரூன் க்ரீன் வீசிய ஒரு ஓவரில் ஒரு புல் ஷாட் மிட்விக்கெட் பவுண்டரியும் பிறகு ஒரு அப்பர் கட் தேர்ட்மேன் சிக்சரும் விளாசி ஆக்ரோஷம் காட்டினார். இருவரும் 98 ரன்களை 5வது விக்கெட்டுக்குச் சேர்த்த போது மிட்செல் ஸ்டார்க் மீண்டும் பவுலிங்கிற்கு வந்து தெம்பா பவுமாவுக்கு ஒரு ஏத்து ஏத்தி கை விரல்களில் அடி கொடுத்தார்.
அடுத்த பந்தையே அருமையாக ஸ்கொயர் கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் பவுமா. அதே ஓவரில் பந்து வெளியே செல்லும் என நினைத்து உள்ளே வந்த பந்தை அரைகுறையாக ஆடியதில் எட்ஜ் வாங்கி பவுல்டு ஆனது. 70 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் ஏறக்குறைய தடுமாறாமல் ஒரு இன்னிங்ஸை ஆடி வெளியேறினார் அவர்.
மார்க்கோ யான்சென் பொறுப்பற்ற முறையில் நேதன் லயன் பந்தை மேலேறி வந்து கொடியேற்றி 2 ரன்களில் கேட்ச் ஆனார். கேஷவ் மகராஜ் 2 ரன்களில் ஸ்டார்க்கின் 299வது விக்கெட்டாக ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார். ஒரு முனையில் ஆக்ரோஷமாக ஆடிய வெரைனா 64 ரன்களில் லயன் பந்து திரும்பும் என்று நினைத்து ஆடினார், திரும்பவில்லை எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது. அதிகபட்ச ஸ்கோர் இவருடையதுதான். ஆன்ரிச் நார்க்கியாவை லயன் வீழ்த்த லுங்கி இங்கிடியை கமின்ஸ் காலி செய்ய ரபாடா 10 நாட் அவுட், தென் ஆப்பிரிக்கா 48.2 ஒவர்களி 152 ஆல் அவுட். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளை சாய்க்க கமின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
27/3 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சை கிழித்தெறிந்த ட்ராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலியாவுக்கு ரபாடா வீசிய முதல் பந்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது, ரபாடா பந்து எழும்ப வார்னரும் எம்பி டிபென்ஸ் செய்தார் ஆனால் பந்து கிளவ்வில் பட்டு ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த ஜோண்டோவின் தலைக்கு மேல் சென்றது ஜோண்டோ எம்பிப் பிடித்தார், அருமையான கேட்ச், வார்னர் டக் அவுட். உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் என்று கடினமான 26 பந்துகளை எதிர்கொண்டு கடைசியில் நார்க்கியாவின் அருமையான பவுன்சருக்கு எம்பி குதித்து தொட்டு கேட்ச் ஆகி வெளியேறினார்.
இடையில் இரண்டு அதிர்ஷ்டகர பவுண்டரிகளுடன் ஒன் டவுன் வீரர் மார்னஸ் லபுஷேன் 11 ரன்கள் எடுத்து உயரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் யான்சென் பந்தை தொட்டார் கேட்ச் ஆகிக் கெட்டார். ஆஸ்திரேலியா 27/3. ஆனால் இதன் பிறகு ஸ்மித் செட்டில் ஆக நினைத்து ஆட ட்ராவிஸ் ஹெட் வெளுத்து வாங்கத் தொடங்கினார். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தது, இவர் 2 ரன்களில் இருந்த போது டீன் எல்கர் கேட்சை தரையில் பட்டு எடுத்தார், இல்லையெனில் தென் ஆப்பிரிக்கா போலவே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்திருக்கும் ஆஸ்திரேலியா. அதிர்ஷ்டமில்லாத பவுலர் நார்க்கியா.
அங்கிருந்து ட்ராவிஸ் ஹெட் திரும்பிப் பார்க்கவில்லை. 8 அதிரடி பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என்று 48 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். லுங்கி இங்கிடியை வெளுத்து விட்டார், ஒரே ஓவரில் 14 ரன்கள் விளாசினார். இதில் அருமையான பிளிக் ஷாட் ஒன்று டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரியில் சிக்ஸ் ஆனது கண்கொள்ளாக் காட்சி. ஸ்மித் இவருக்கு உறுதுணையாக ஆடினார், நிறைய திணறினார், தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார், கடைசியில் 38 ரன்கள் எடுத்த நிலையில் நார்க்கியாவின் 148 கிமீ இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். அந்த ஓவரில் நார்க்கியா செம ஸ்பீடாக வீசினார். ஒரு பந்து 150 கிமீ வேகத்தைக் கடந்ததாகும்.
இவர் ஆட்டமிழந்த பிறகு இரவுக்காவலனாக ஸ்காட் போலண்டை இறக்கினர், ஆனால் அவர் ரபாடா வீசிய முதல் நாள் ஆட்ட கடைசி ஓவரில் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேற ஆஸ்திரேலியா 145/5, ட்ராவிஸ் ஹெட் 77 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 78 நாட் அவுட் என்று நிற்கிறார். நாளை 2ம் நாள் ஆட்டம். காலை 5:4-5க்குத் தொடங்கும். சோனி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT