Published : 15 Dec 2022 09:22 AM
Last Updated : 15 Dec 2022 09:22 AM
பிரஸ்ஸல்ஸ்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது மொராக்கோ அணி. அதனால் விரக்தி அடைந்த அந்த நாட்டு ரசிகர்கள் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பகுதியில் போலீஸாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர்.
காலம்காலமாக உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி இருந்தது ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ. அந்த அணி இந்த தொடரில் இரண்டு கோல்களை மட்டும்தான் விட்டுக் கொடுத்துள்ளது. அதுவும் அரையிறுதிப் போட்டியில்தான்.
குரூப் சுற்றில் பெல்ஜியம் மற்றும் கனடாவை வீழ்த்தியும், குரோஷியாவுக்கு எதிராக சமனும் செய்திருந்தது மொராக்கோ. ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட்-அவுட்டில் வெளியேற்றியது. காலிறுதியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில்தான் பிரான்ஸ் அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை தழுவியது அந்த அணி.
தோல்வி கொடுத்த விரக்தியால் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடியிருந்த மொராக்கோ ரசிகர்கள், போலீஸாருடன் மோதி உள்ளனர். பட்டாசுகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு போலீஸாரை நோக்கி ரசிகர்கள் வீசியதாக தகவல். கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர் போலீசார்.
தங்கள் அணி அரையிறுதியில் இருந்து வெளியேறி இருந்தாலும் இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அணி என்ற பெயருடன் வெளியேறுவதாக மொராக்கோ அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT