Published : 14 Dec 2022 08:31 PM
Last Updated : 14 Dec 2022 08:31 PM
ஒட்டுமொத்த கால்பந்தாட்ட ரசிகர்களும் ‘மெஸ்ஸி.. மெஸ்ஸி..’ என ஒருமித்த குரலில் மெஸ்மெரிக்க செய்துள்ளார் லியோனல் மெஸ்ஸி. இனம், நாடு, கண்டம், மொழி என அனைத்தையும் கடந்த ஆத்மார்த்தமான அன்பை ரசிகர்கள் அவர் மீது பொழிந்து வருகின்றனர். அவர் களத்தில் களம் கண்டால் போதும் என சொல்லும் ரசிகர்களும் உண்டு. அதற்கெல்லாம் காரணம் அவரது ஆட்டத்திறனும், அதில் உள்ள க்ளாஸும்தான். மாயமானை போல கால்பந்தாட்ட களத்தில் அங்கும் இங்குமாக ஓடி பந்தை வலைக்குள் தள்ளுவதிலும், சக வீரர்கள் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்வதுமாக மிகவும் பிஸியாக இயங்குபவர். இப்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
5 வயதில் கிராண்ட்லி (Grandoli) அணிக்காக தனது ஓட்டத்தை தொடங்கிய அவர் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார். அதுவும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிதான் தனது இறுதிப் போட்டி என்று சொல்லியுள்ளார். ஒரு ஜாம்பவானுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். இந்த அறிவிப்பை போட்டிக்கு பின்னர் கூட அவர் சொல்லி இருக்கலாம். ஆனால், அதை முன்கூட்டியே சொல்லியுள்ளார். ‘எதற்கும் தயாராக இரு’ என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவரது இந்த அறிவிப்பு உள்ளது. அது சக அணி வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரையில் அனைவருக்கும் பொதுவானது. இதன் மூலம் மனரீதியாக தன் அணி வீரர்களை டச் செய்துள்ளதோடு கோப்பையை வெல்வதற்கான உந்துதலையும் ஒரு தலைவனாக அவர் கொடுத்துள்ளார். எப்படியும் இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பை என்பது தொடர் தொடங்குவதற்கு முன்பே தெரியும். ஆனால், இதுதான் அவரது கடைசிப் போட்டி என்றால் அதில் வெற்றி பெற்றாக வேண்டும் என அவர் தொடங்கி அனைவரிடத்திலும் அந்த எண்ணத்தை விதைத்துள்ளார்.
சாதனைகளை பட்டியலிட தனி புத்தகம் போடலாம்: கால்பந்து உலகின் ஆல்-டைம் சிறந்த வீரர்களில் மெஸ்ஸி இருப்பார். 7 முறை Ballon d'Or விருதை வென்றது தொடங்கி நாட்டுக்காக 96 கோல்கள், கிளப் அணிகளுக்காக 487 கோல்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் சிலர் கூட மெஸ்ஸியின் ரசிகர்கள்தான். தன் நாட்டுக்காக உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை பதிவு செய்தவர், அர்ஜென்டினாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர், அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்களை பதிவு செய்தவர் போன்ற சாதனைகள் அவர் வசம் உள்ளது. அதேபோல கிளப், தேசம் என அனைத்தையும் சேர்த்து பார்த்தால் இவரது கோல் சராசரி 0.78. இது இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரொனால்டோவை காட்டிலும் 0.6 புள்ளிகள் அதிகம்.
10 வயதில் ஹார்மோன் குறைபாடு காரணமாக அவர் சிகிச்சை பெற வேண்டிய சூழல். அவர் தந்தையின் மருத்துவ காப்பீட்டை கொண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சிகிச்சை கொடுக்க முடிந்துள்ளது. பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக ஸ்பெயின் நாட்டுக்கு புலம் பெயர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சைக்கான செலவுகளை கவனித்துக் கொண்டது பார்சிலோனா.
சீராட்டி வளர்த்த ஸ்பெயின்: அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெஸ்ஸியை சீராட்டி வளர்த்தது ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இயங்கி வரும் பார்சிலோனா கிளப் அணிதான். அவருக்கு அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் என இரட்டைக் குடியுரிமை உள்ளது. அதன் காரணமாக அவரை சர்வதேச களத்தில் ஸ்பெயின் அணிக்காக விளையாட வைத்து அழகு பார்க்க சில முயற்சிகள் நடந்தன. ஆனால், மெஸ்ஸி அதை மறுத்துவிட்டார். இதற்கு அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியும் துணை நின்றது.
2004ல் அர்ஜென்டினாவின் அண்டர் 20 அணியில் விளையாடினார். அதன் மூலம் அந்த அணியின் இளவரசனாக பட்டம் சூட்டிக் கொண்டார். அடுத்த ஆண்டே சீனியர் அணியில் விளையாட தகுதி பெற்றார். 2006 வாக்கில் சர்வதேச களத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தார். 8 முறை சர்வதேச களத்தில் ஹாட்-ட்ரிக் கோல்களை பதிவு செய்துள்ளார். இதில் ஒரு ஹாட்-ட்ரிக் பிரேசில் அணிக்கு எதிராக பதிவு செய்தது.
கடைசி பாய்ச்சல்: 2006 தொடங்கி உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். 2014 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பைக்கு மிக அருகில் சென்று வெல்ல முடியாமல் திரும்பினார். இப்போது மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கோப்பையை வென்று விடை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நிச்சயம் அதை மெஸ்ஸி மெய்பிப்பார் என நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT