Published : 14 Dec 2022 03:28 PM
Last Updated : 14 Dec 2022 03:28 PM
கோவா: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் கோவா அணிக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். இது அவர் விளையாடும் முதல் தர கிரிக்கெட் போட்டி.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல்லாயிரம் ரன்கள் குவித்த பேட்ஸ்மேன். அவரை பார்த்து வளர்ந்த அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்.
23 வயதான அவர் நடப்பு உள்ளூர் கிரிக்கெட் சீசன் தொடங்கியது முதல் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் அவர் அறிமுக வீரராக களம் கண்டார்.
அவர் பேட் செய்ய வந்த போது கோவா அணி 201 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சுயாஷ் பிரபுதேசாய் உடன் இணைந்து 209 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
அதோடு இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் நேர இடைவேளையின்போது அவர் 195 பந்துகளில் 112 ரன்கள் எடுத்திருந்தார். அவரது இன்னிங்ஸில் 15 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். 178 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார்.
1988-ல் சச்சின் தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசி இருந்தார். இப்போது 2022-ல் அவரது மகன் அர்ஜுனும் முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT