Published : 14 Dec 2022 10:44 AM
Last Updated : 14 Dec 2022 10:44 AM

FIFA WC 2022 அலசல் | மின்னல் வேக மெஸ்ஸி மேஜிக்... அல்வாரேஸ் எனும் அற்புதன்!

கத்தார் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் வந்த அர்ஜென்டினா அணி அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி அந்தப் பிரகாசமான வெற்றி உச்சத்திற்கு முதல் கட்டத்தில் உள்ளது. மேஜிக் மெஸ்ஸியின் அற்புதமான மின்னல் வேகம், சாதுர்யம், உத்தி கைக்கொடுக்க, அல்வாரேஸ் 2 அற்புத கோல்களை அடிக்க, குரோஷியாவை 3-0 என்று அர்ஜென்டினா ஊதித்தள்ளி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

1986-ல் டீகோ மாரடோனாவைப் பார்த்தவர்கள் இந்த அரையிறுதியில் மெஸ்ஸியின் ஆட்டத்தில் டீகோ மாரடோனாவின் ஆவி புகுந்திருப்பதைக் காணத் தவறியிருக்க மாட்டார்கள். வழக்கம்போல் மெஸ்ஸிதான் ஓப்பனிங் கோல், 34-வது நிமிடத்தில். ஆனால் காரணம் அல்வாரேசின் அற்புத ஓட்டம்தான்.

அபாரமான ஒரு பாஸில் பந்தை குரோஷியா கோல் அருகே கொண்டு வந்து அவர் கோல் அடிக்கும் தருணம் குரோஷியாவின் கோல் கீப்பர் லிவாகோவிச் பந்தை தடுக்க முயற்சிக்காமல் அல்வாரேஸைத் தடுத்தார், பெனால்டி பகுதிக்குள் வேறு வழியில்லாமல் ஃபவுல் செய்ய வேண்டியதாயிற்று, பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. மெஸ்ஸி இடி போன்ற ஷாட்டில் பந்தை வலைக்குள் திணித்தார். அர்ஜென்டினா 1-0 என்று முன்னிலை.

பிரேசிலுக்கு எதிராகக் கைகொடுத்த குரோஷியாவின் மிட்ஃபீல்ட் மேஜிக் இன்று கைக்கொடுக்கவில்லை. காரணம் அர்ஜென்டினா ஃபுல் பேக் 4, முன் களத்தில் 2, இடையில் 4 வீரர்கள் என்று உத்தி வகுக்க மெஸ்ஸிக்கு நிறைய இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவர் சுதந்திரமாக வளைய வந்தார். முதல் கோல் மூலம் உலகக் கோப்பையில் 11 கோல்களுடன் அர்ஜென்டினாவின் அதிக உலகக் கோப்பைக் கோல்களில் முதலிடத்திற்கு முன்னேறினார். மேலும், இந்த உலகக் கோப்பையின் 5வது கோலுடன் கைலியன் மபாப்பேயுடன் கோல்டன் பூட் விருதுப் போட்டியில் சரிசமமாக நிற்கிறார்.

மெஸ்ஸியை தடுக்க முடியவில்லை. ஆட்கொள்ள முடியவில்லை. குரோஷியாவை மூழ்கடித்தார் என்றே கூற வேண்டும். அவரது வேகம் அவரது வயது 35 என்பதை நம்ப மறுக்கச் செய்தது. மெஸ்ஸியின் சில புள்ளி விவரங்களை இங்கு குறிப்பிடுவது கட்டயாமாகும். இது மெஸ்ஸியின் 25-வது உலகக் கோப்பை போட்டி, இதற்கு முன் 25 போட்டிகளில் ஆடிய ஜெர்மனி வீரர் லோத்தார் மத்தாவ்ஸின் சாதனையைச் சமன் செய்தார் மெஸ்ஸி. 11வது கோலை அடித்து அர்ஜென்டினாவுக்கான சாதனையைப் படைத்தார். அல்வாரேஸ் கோல் அடிக்க இவர் செய்த அட்டகாசமான அசிஸ்டுகளின் எண்ணிக்கை உலகக்கோப்பைகளில் மட்டும் 8 ஆக உயர்ந்துள்ளது. டீகோ மாரடோனாவும் 8 அசிஸ்ட்கள் கொடுத்துள்ளார்.

மெஸ்ஸி தன் வாழ்நாளில் இதுவரை 11 லீக் டைட்டில்கள், 4 சாம்பியன் லீக் சாம்பியன் பட்டங்கள், கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார், 7 முறை சிறந்த கால்பந்து வீரருக்கான மதிப்பு மிக்க Ballons d’Or விருதை வென்றுள்ளார். தன் கால்பந்தாட்ட வாழ்க்கையில் 791 கோல்களை அடித்துள்ளார் இதில் 96 கோல்கள் அர்ஜென்டினாவுக்காக அடித்தது. உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் மட்டுமே அவரது கால்பந்து வாழ்க்கையில் இதுவரை ஏமாற்றி வந்துள்ளது. 2014-ல் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்தது அர்ஜென்டினா. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு. பிரான்ஸையோ, மோராக்கோவையோ சந்திக்க வேண்டியுள்ளது.

குரோஷியா ஒரு விதமான கடின உழைப்பினால்தான் இந்த அரையிறுதி வரை முடிந்ததே தவிர அவர்கள் அணி பிரமாதமான அணியல்ல. ஜப்பானையும் பிரேசிலையும் அதிர்ஷ்டவசமாக வீழ்த்தியே அரையிறுதிக்கு வந்தது. ஆனால் இந்த முறை 2018 போல் இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை மெஸ்ஸி, அல்வாரேஸ் முறியடித்து விட்டனர், 39 லட்சம் மக்கள் கொண்ட குரோஷியாவுக்கு ஏமாற்றம் அளித்தாலும் இதுவரை வந்ததே பாக்கியம் என்று விட்டு விட வேண்டியதுதான்.

மாறாக அர்ஜென்டினாவின் 6வது உலகக்கோப்பை அரையிறுதி ஆகும் இது. இன்னும் தோற்கவில்லை. சவுதி அரேபியாவிடம் முதல் போட்டியிலேயே தோற்றது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ய அர்ஜென்டினா மீண்டெழுந்தது. எப்படி கேமரூனிடம் தோற்று இறுதிக்கு முன்னேறியதோ இப்போதும் அதே போல் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

மெஸ்ஸியின் அசிஸ்ட், அல்வாரேஸின் தடையில்லா ஓட்டம்: 34வது நிமிடத்தில் குரோஷிய நட்சத்திரம் மோட்ரிச் தளர்வாக ஒரு பந்தை தொட்டு விட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், அல்வாரேஸுக்கு பந்தை அனுப்ப அல்வாரேஸுக்கு கிடைத்த சுதந்திர வெளியில் கடைந்து எடுத்து குரோஷியா கோல் அருகே வந்து விட்டார்.

ஆனால் லாவ்ரென் அவரது ஷாட்டை தடுக்க முயன்றார். ஆனால் இடையில் பந்தை தடுக்கப் பார்க்காமல் அல்வாரேஸை உடலுக்குடல் சந்திக்க முயன்றார் குரோஷியா கோல் கீப்பர் லிவாகோவிச். பெனால்டி பகுதி என்பதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது, மெஸ்ஸி தனை இடி போல் உள்ளே திணித்தார்.

இடையில் குரோஷியா ஒரு கார்னர் வாய்ப்பை நடுவரிடம் கோரியது. இவான் பெரிசிச்சின் ஷாட் அர்ஜென்டினா வீரர் மேல் பட்டுப் போனதாக குரோஷியா முறையிட்டது. அதற்குக் கொடுக்காத நடுவர் இதற்குப் பெனால்டி கொடுத்ததும் குரோஷியா பெஞ்சில் வெகுண்டது, இதனால் குரோஷியாவின் அசிஸ்டெண்ட் கோச் மண்ட்சூகிக்கிற்கு சிகப்பு அட்டைக் காட்டப்பட்டு அவர் வெளியேறினார்.

0-1 என்று பின் தங்கியிருந்து மேலே வருவது குரோஷியாவுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் 2-0 என்று பின் தங்கிப் போனது குரோஷியாவின் வாய்ப்புகளை முடக்கியது. காரணம் அல்வாரேஸின் அற்புதமான கோல்தான். குரோஷியாவின் கார்னரை கிளியர் செய்தபோது பந்துக்கு குரோஷிய நடுக்கள வீரர் மார்செலோ புரோஸோவிச் வருவதற்கு முன்பே மின்னல் மெஸ்ஸி பந்தைப் பெற்றுவிட்டார்.

மெஸ்ஸி அல்வாரேஸிடம் கிட்டத்தட்ட நட்ட நடு மைதானத்தில் பந்தை அனுப்ப அல்வாரேஸ் மானைத் துரத்தும் புலியின் வேகத்துடன் பந்துடன் 50 மீட்டர் ஓடினார், குரோஷியா பின்னால் தான் ஓடி வர முடிந்தது. 2-3 குரோஷிய வீரர்களைக் கடைந்து எடுத்து பந்தை கோல் அருகே கொண்டு வந்தார். அல்வாரேஸ் ஷாட்டை குரோஷிய வீரர் போர்னா சோசா தடுக்கும் முயற்சியில் சோடை போனார் பந்து கோலுக்குள் மோதியது. 2-0. 39-வது நிமிடத்தில் குரோஷியாவின் விதி முடிந்தது. 45வது நிமிடத்தில் ஏறக்குறைய 3-0 என்று ஆகியிருக்கும் ஆனால் அர்ஜெண்டின வீரர் அலிஸ்டர் தலையால் முட்டிய கோல் முயற்சியை குரோஷிய கோல் கீப்பர் தடுத்து விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு 69வது நிமிடத்தில்தான் வலது புறத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்தது. டச் லைனில் பந்தைப் பெற்ற லியோனல் மெஸ்ஸி பந்தை மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார் அவரைத் தடுக்க குரோஷியாவின் உலகின் சிறந்த டிஃபெண்டர் குவார்டியாலும் வந்தார். குவார்டியோலுடன் ஒரு விளையாட்டு விளையாடினாரே பார்க்க வேண்டும் மெஸ்ஸி. அற்புதத்தின் உச்சம்.

பலவிதமாக திரும்பி கால்களின் மாயச்சுழற்சியில் குவார்டியோலுக்கு போக்குக் காட்டி உலகின் தலை சிறந்த டிஃபெண்டரை குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவது போல் காட்டினார், ஒரு கட்டத்தில் கோலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அனாயாசமாக ட்ரிப்ளிங் செய்தார். பந்து தன் காலை விட்டு போகும் என்ற எண்ணமே இல்லாத ஒரு அலட்சியமான தன்னம்பிக்கை மெஸ்ஸியிடம் காணப்பட்டது. ஒருவழியாக குவார்டியோலுக்குக் காட்டிய விளையாட்டை முடித்து பந்தை அல்வாரேஸிடம் அனுப்ப அல்வாரேஸ் 3வது கோலை அடித்தார், ஆனால் இது மெஸ்ஸியின் கோல்தான்! 2022 உலகக்கோப்பையின் ஆகச்சிறந்த அசிஸ்ட் இது என்று கருதப்படுகிறது.

3-0 என்பதில் குரோஷியாவின் மனோபலம் குறைந்தது, அதன் பிறகான ஆட்டத்தில் வழக்கமான குரோஷியாவின் ஆக்ரோஷம் இல்லாமல் போக அர்ஜென்டினா கொண்டாடியது. அன்று பிரேசிலிடம் கோல் அடிக்க முடியாது போகும்போதெல்லாம் ஏற்பட்ட பதற்றம் அந்த அணியை தோல்வியுறச் செய்தது, ஆனால் இன்று அர்ஜென்டினா வெற்றி எங்கள் பக்கமே என்பது போல் உறுதியுடன் ஆடியதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x