Published : 14 Dec 2022 06:35 AM
Last Updated : 14 Dec 2022 06:35 AM

இந்தியா – வங்கதேசம் டெஸ்டில் இன்று மோதல்

சட்டோகிராம்: இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் சட்டோகிராமில் இன்று காலை 9 மணி அளவில் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாகூர் அகமது மைதானத்தில் இன்று காலை 9 மணி அளவில் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வங்கதேச தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன. 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்த 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற அணிகளின் முடிவுகளுக்கு காத்திருக்காமல் நேரடியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்க முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் பயணமானது ஜாகூர் மைதானத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. எனினும் இறுதி நாட்களில் சுழலுக்கு கைகொடுக்கும்.

டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இதுவரை இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது இல்லை. எனினும் ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கக்கூடும். இதுபோன்ற ஆடுகளத்தில் ஜடேஜா இல்லாதது எதிரணியின் 3-வது மற்றும் 4-வது இன்னிங்ஸ் பேட்டிங் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும் ஜடேஜாவின் இடத்தை நிரப்ப அக்சர் படேல் முயற்சி செய்யக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி 3-வது சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் குல்தீப் யாதவ் அல்லது சவுரப் குமார் இடம் பெறக்கூடும். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சவுரப் குமார் சமீபத்தில் வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 15 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். ஒருவேளை 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க முடிவு செய்தால் உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருடன் ஜெயதேவ் உனத்கட் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறக்கூடும். பேட்டிங்கில் ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் பலம் சேர்க்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x