Published : 13 Dec 2022 03:55 PM
Last Updated : 13 Dec 2022 03:55 PM

“உங்கள் விதி உங்கள் கையில்...” - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கான இந்திய வாய்ப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா

இந்திய அணி வீரர்கள்

டாக்கா: 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா.

நாளை வங்கதேச அணிக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும். அப்போதுதான் அதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உயிர்ப்போடு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“இது ரொம்பவே சிம்பிள். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் உள்ளன. இந்தியா அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அது நடக்காமல் போனால் இந்திய அணிக்கான வாய்ப்பு கடினமானதாக இருக்கும். ஆடும் லெவனில் தொடங்கி பல விஷயங்கள் உள்ளன. ஆனால், உங்கள் விதி உங்கள் கையில் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? - 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்திய அணி இதுவரை நான்கு தொடர்களை விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டு உள்நாடு மற்றும் இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் அடங்கும். அதில் 2 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. 1 தொடர் தோல்வியிலும், 1 தொடர் சமனிலும் முடிந்துள்ளது.

மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 2 போட்டிகளை சமனிலும் இந்தியா நிறைவு செய்துள்ளது. 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ளன. வங்கதேச அணிக்கு எதிராக 2 மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் உள்ளன. இந்த 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றாக வேண்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x