Published : 10 Dec 2016 06:23 PM
Last Updated : 10 Dec 2016 06:23 PM

விஜய், கோலியின் திறமை வாய்ந்த சதத்தினால் வலுவான நிலையில் இந்திய அணி

முரளி விஜய், விராட் கோலி ஆகியோரது திறமை வாய்ந்த சதங்களினால் மும்பை டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்தில் 51 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா அணி வலுவாக திகழ்கிறது.

ஆட்ட முடிவில் 15-வது டெஸ்ட் சதத்தை எடுத்த விராட் கோலி 147 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி 262/2 என்ற நிலையிலிருந்து முரளி விஜய் விக்கெட்டுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்து திணறியது. ஆனால் கோலி ஒருமுனையில் சுவராக நிற்க, பந்துகள் திரும்பும் கடினமான பிட்சில் தனது அதிதிறமை பேட்டிங்கை வெளிப்படுத்தி ஜடேஜாவுடன் 7-வது விக்கெட்டுக்காக 57 ரன்களையும் அதன் பிறகு ஜெயந்த் யாதவுடன் இணைந்து பிரியாமல் இதுவரை 87 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்த இரண்டு முக்கியக் கூட்டணி மூலமே இந்திய அணி தற்போது வலுவான 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று காலை ஆட்டம் தொடங்கிய போது பால் முதல் ஓவரை வீசினார், முதல் பந்து இன்ஸ்விங்கர் ஆடாமல் விட்டார் புஜாரா, அடுத்த பந்து சற்றே நெருக்கமான லைனில் மீண்டும் ஒரு இன்ஸ்விங்கரை வீச புஜாரா ஆடாமல் விட முடிவெடுத்தார், ஆனால் பந்து ஸ்டம்பைத் தாக்கியது. அதிர்ச்சிகரமான தொடக்கம் கண்டது இந்தியா புஜாரா 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களில் வெளியேற, பலத்த கரகோஷங்களுக்கிடையே விராட் கோலி களம் புகுந்தார்.

சதக்கூட்டணி அமைத்த விஜய், விராட் கோலி

70 ரன்களுடன் தொடங்கிய முரளி விஜய் 231-வது பந்தில் தனது சதத்தை எட்டினார். பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து ஒன்றை கிட்டத்தட்ட சச்சின் பாணியில் நேராக தூக்கி அடித்து பவுண்டரி அடித்தார், இது ஒரு ஸ்டன்னிங் ஷாட். முந்திய நாள் ஜானி பேர்ஸ்டோ விஜய்க்கு ஸ்டம்பிங்கை கோட்டை விட்டதன் பலனை இங்கிலாந்து அனுபவித்தது. இன்று ஒருமுறை நடுவர் எல்.பி.தீர்ப்பளிக்க மேல்முறையீட்டில் தப்பினார் விஜய், பந்து மட்டையில் பட்டுச் சென்றது தெளிவாக ரீப்ளேயில் தெரிந்தது.

கோலி தொடக்கத்தில் ஒரு 3 பவுண்டரிகளை மிக அருமையாக தேர்ட்மேன், பாயிண்ட் திசைக்கு இடையில் அடித்தார், மூன்றுமே டச் ஷாட். ஆனால் இம்முறையும் இங்கிலாந்து தவறிழைக்காமல் இல்லை 68 ரன்களில் கோலிக்கு ரஷீத் தன் பந்து வீச்சில் தனக்கு வந்த சற்றே கடினமான வாய்ப்பை நழுவ விட்டார். மொயின் அலியை முரளி விஜய்யை நேராக சிக்ஸ் தூக்க இந்தியா 150-லிருந்து 200 ரன்களை 66 பந்துகளில் கடந்தது. உணவு இடைவேளையின் போது இந்தியா 247/2 என்று இருந்தது. அதாவது 3-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை புஜாரா விக்கெட்டை இழந்து 101 ரன்களை இந்திய அணி எடுத்தது.

முரளி விஜய் 124 ரன்களுடனும் கோலி 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு தேநீர் இடைவேளை வரை இந்தியா மேலும் 101 ரன்களைச் சேர்த்தாலும் இடையில் விஜய், கருண் நாயர், பார்த்திவ் படேல், அஸ்வின் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து 348/6 என்று ஆனது.

கோலியும் விஜய்யும் 116 ரன்களை சேர்த்த பிறகு, 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுத்த முரளி விஜய், அடில் ரஷீத் புல்டாஸை அவரிடமே அதிர்ச்சிகரமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி ஸ்பின்னர்களை பின்னால் சென்றும் தேவைப்படும் போது முன்னால் வந்தும் ஆடி களவியூகத்தை முறியடிக்குமாறு சிலபல சிங்கிள்களையும், 2 ரன்களையும் எடுத்ததோடு கண்களுக்கு விருந்தான 17 பவுண்டரிகளையும் அடித்தார்.

கருண் நாயர் ஒரு புல்ஷாட்டுடன் 2 பவுண்டரிகள் அடித்து 18 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார், இவரை அடில் ரஷீத் பாடாய்ப்படுத்தினார், லெக்ஸ்பின் பந்துகள் சதுரமாகத் திரும்ப கருண் நாயர் கன்னாபின்னாவென்று பீட்டன் ஆனார். கடைசியில் மொயின் அலியிடம் எல்.பி.ஆகி தன் வேதனையை முடிவுக்குக் கொண்டு வந்தார். பார்த்திவ் படேல் பெரும்பாலும் பின்காலில் சென்று ஆடிவந்தார், 31 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச அழைக்கப்பட அவர் படேலை முன்னால் வந்து டிரைவ் ஆட ஆசைக் காட்ட பணிந்த படேல் டிரைவ் ஆட முயல, திரும்பி எழும்பிய பந்து எட்ஜ் ஆகி பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனது. ஆல்ரவுண்டர் அஸ்வினையும் ஜோ ரூட் டக் அவுட் ஆக்கினார். கோலி ஒருமுனையில் சுவராக நிற்க, இந்தியா 307/6 என்று சரிவுமுகம் காட்டியது.

ஜடேஜா இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பாசிட்டிவ்வாக ஆட கோலியும் தனது அதி திறமை பேட்டிங்கை வெளிப்படுத்த இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 57 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜடேஜா 25 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் பந்தை ஆக்ரோஷ ஷாட்டுக்கு முயன்று பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு ஜெயந்த் யாதவ் மீண்டும் தனது அபார தடுப்பாட்ட உத்தியை வெளிப்படுத்தி கோலிக்கு உறுதுணையாக ஆடி வருகிறார்.

விராட் கோலி சதம் எடுத்த பிறகு தன் பாணி ராஜகவர் டிரைவ் ஒன்றை ஆடி சதத்தைக் கொண்டாடினார், இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த வீரரானார் கோலி சராசரியும் 87 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்த் யாதவ் கிரீசில் நிற்கக் காரணம் ஜோ ரூட் விட்ட கேட்ச். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அருமையான பந்து ஒன்று எட்ஜ் எடுக்க ஜோ ரூட் ஸ்லிப்பில் கேட்சை தட்டிவிட்டார், இதைப் பிடித்திருந்தால் ஒருவேளை இந்திய அணி ஆல் அவுட் ஆகியிருக்கலாம், ஆனால் அதன் பிறகு ஜெயந்த்தும் அருமையாகவே தடுப்பாட்டம் ஆடினார், டெய்ல் எண்டர் கிரீசில் இருக்கும் போது வேகப்பந்து வீச்சு பலம் பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் மிகவும் விசித்திரமாக 49 ஓவர்கள் பழைய பந்திலேயே வீச முடிவெடுத்ததன் மர்மம் புரியவில்லை.

ஆட்ட முடிவில் விராட் கோலி 147 ரன்களுடனும், 3 பவுண்டரிகளுடன் ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி, ரஷீத், ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

100 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்று விட்டால் அது இங்கிலாந்துக்கு பெரிய சவாலாக அமையும். ஏனெனில் பிட்சில் பந்துகள் பயங்கரமாகத் திரும்பி எழுகின்றன, மும்பையில் எப்போதும் 4-ம் நாள், 5-ம் நாள் மிகமிகக் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இந்திய அணி கோலியின் அதி திறமை சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது என்று கூற வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x