Published : 12 Dec 2022 04:29 PM
Last Updated : 12 Dec 2022 04:29 PM
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மொராக்கோவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது போர்ச்சுகல் அணி. அந்த அணியில் விளையாடிய ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக அமைந்துள்ளது. இந்தத் தோல்விக்கு பிறகு கண்ணீர் மல்க களத்தில் இருந்து அவர் விடைபெற்றார்.
இந்தச் சூழலில் அவரை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. ரொனால்டோவின் கோடான கோடி ரசிகர்களில் கோலியும் ஒருவர் என்பதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
“கால்பந்து விளையாட்டுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களாகவும் நீங்கள் செய்ததை எந்தவொரு கோப்பையாலும், பட்டத்தாலும் எங்களிடம் இருந்து கொண்டு செல்ல முடியாது. நீங்கள் விளையாடும்போது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், அதன்மூலம் ரசிகர்களாகிய நாங்கள் பெறுகின்ற உணர்வையும் இந்தப் பட்டங்களால் விவரிக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம்.
அதுவும் ஒவ்வொரு முறையும் களத்தில் களம் காணும் போதெல்லாம் முழு அர்ப்பணிப்பு செலுத்தி விளையாடும் மனம் படைத்த, கடினமாக உழைக்கின்ற ஒரு மனிதனுக்கு கிடைத்த மெய்யான ஆசி அது. எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் உத்வேகம் நீங்கள். எனக்கு எப்பவுமே நீங்கதான் ஆல்-டைம் கிரேட்” என கோலி தெரிவித்துள்ளார்.
ரவுண்ட் ஆப் 16 மற்றும் காலிறுதியில் சப்ஸ்டிடியூட் வீரராக பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார் ரொனால்டோ. அவரை அணியில் பிரதான வீரராக ஆட வைத்திருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT