Last Updated : 16 Dec, 2016 08:23 PM

 

Published : 16 Dec 2016 08:23 PM
Last Updated : 16 Dec 2016 08:23 PM

உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி இறுதிக்கு இந்தியா முன்னேற்றம்: ஆஸி.யை வீழ்த்தி வெளியேற்றியது

ஜூனிய உலகக்கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஜூனியர் ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் வரும் ஞாயிறரன்று பெல்ஜியம் அணியைச் சந்திக்கிறது இந்திய அணி.

லக்னோவில் நடைபெற்ற அரையிறுதியில் முழு நேர ஆட்டம் 2-2 என்று டிரா ஆனதால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. இதில் இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாஹியா இரண்டு கோல்களை அபாரமாகத் தடுக்க இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4-2 என்று வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றது.

உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கடைசியாக 2001-ல் ஹோபார்ட்டில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது.

இன்றைய அரையிறுதியில் இந்திய அணியின் குர்ஜந்த் சிங் (42வது நிமிடம்), மந்தீப் சிங் (48வது நிமிடம்) அருமையான பீல்ட் கோல்களை அடித்தனர். முன்னதாக 14-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டாம் கிரெய்க் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

ஆட்டம் முடியும் தறுவாயில் இந்திய அணியின் தடுப்பாட்டத்தில் சுணக்கம் ஏற்பட 57-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் லச்லான் ஷார்ப் 2-வது கோலை அடித்து ஆட்டம் சமன் ஆக உதவினார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாஹியா, ஆஸி.வீரர்கல் மேத்யூ பேர்ட் மற்றும் ஷார்ப் ஆகியோர் அடித்த பெனால்டி ஷாட்களை அருமையாக தடுத்தார். முழு நேர ஆட்டத்திலும் 22-ம் நிமிடத்தில் ஆஸ்திரேலியா இரு கார்னர்களைப் பெற்ற போதும் தாஹியா கோல்களை தடுத்தார். மாறாக பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய வீரர்களின் அடி துல்லியமாக அமைந்தது.

கேப்டன் ஹர்ஜீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித் மற்றும் மன்பிரீத் ஆகியோர் 4 பெனால்டி கோல்களை அடித்து வெற்றிபெறச் செய்தனர்.

முன்னதாக மற்றொரு அரையிறுதியில் பெல்ஜியம் அணி இதே பெனால்டி ஷூட் அவுட்டில் கடந்த சாம்பியன் ஜெர்மனியை 4-3 என்று அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x