Published : 15 Dec 2016 09:13 AM
Last Updated : 15 Dec 2016 09:13 AM
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரின் தென் மேற்கு பகுதியில் உள்ள காஸினி கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முர்தாஜா அஹ்மதி. இந்த வயதிலேயே அர்ஜென்டினா கால்பந்து அணி யின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகனாக இருந்து வந்தார். அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை கூட வாங்க பணம் இல்லாத நிலையில் கடந்த மே மாதம் பாலீத்தின் பையில் மெஸ்ஸியின் பெயரை எழுதியடி முர்தாஜா விளையாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேக மாக பரவியது.
இதை பார்த்த மெஸ்ஸி, தனது கையெழுத்திட்ட ஜெர்சியை சிறுவன் முர்தாஜாவுக்கு பரிசாக அனுப்பி வைத்தார். இந்நிலையில் மெஸ்ஸியை நேரில் சந்திக்கும் கனவும் முர்தாஜாவுக்கு நிறைவேறி உள்ளது.
நேற்று முன்தினம் தோகாவில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸின் பார்சி லோனா அணியும், சவுதி அரேபி யாவின் அல்-அஹ்லி அணியும் மோதின. இந்த போட்டியை காண நேரில் அழைத்து செல்லப்பட்ட முர்தாஜா, மெஸ்ஸியை நேரில் சந்தித்தார்.
போட்டி தொடங்கும் முன்னதாக வீரர்கள் சிறுவர்கள் கையை பிடித்தபடி மைதானத்துக்குள் நுழைவார்கள். அப்போது மெஸ்ஸி, முர்தாஜாவின் கைகளை பிடித்துக்கொண்டு மைதானத்தில் நுழைந்தார். இதன் மூலம் தனது லட்சிய மனிதரை சந்திக்கும் முர்தாஜாவின் கனவு நிறைவேறி உள்ளதாக 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்து வரும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முர்தாஜா கூறும்போது, “எனது ஹீரோவை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கனவாக இருந்தது. நான் மெஸ்ஸியை மிகவும் நேசிக்கிறேன்’’ என்றார்.
முர்தாஜாவின் தந்தை ஆரிப் அஹ்மதி கூறும்போது, “எனது மகன் ஆப்கானிஸ்தானின் மெஸ்ஸியாக வரவேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.
நட்பு ரீதியாக நடைபெற்ற கால்பந்து போட்டியில் பார்சிலோனா 5-3 என்ற கோல் கணக்கில் அல்-அஹ்லி அணியை வீழ்த்தியது. பார்சிலோனா அணி தரப்பில் லூயிஸ் சுவாரஸ், மெஸ்ஸி, நெய்மர், பாகோ, ராபின் கா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அல்-அஹ் அலி அணி தரப்பில் முகானத் இரு கோல்களும், ஓமர் ரஹ்மான் ஒரு கோலும் அடித்தனர். வெற்றி பெற்ற பார்சிலோனா அணிக்கு 18 காரட்டிலான தங்க கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை 18,126 பேர் நேரில் கண்டுகளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT