Published : 11 Dec 2022 12:28 AM
Last Updated : 11 Dec 2022 12:28 AM
தோகா: மொராக்கோ அணி உடனான தோல்வியால் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்தில் உடைந்து அழுதார்.
அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ வீரர் யூசெப் என்-நெசிரி அடித்த கோல் காரணமாக போர்ச்சுகல் தோல்வி அடைந்து கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது. கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் பலருக்கும் போர்ச்சுகல் அணியின் தோல்வி அதிர்ச்சிகரமாக அமைந்தது.
இதனிடையே, தோல்வியால் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார். மைதானத்தில் மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூமிற்கு செல்லும்போது அழுதுகொண்டே சென்றார். இந்தக் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமரவைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட 21 வயதான கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமலேயே போர்ச்சுகல் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அதனால், இன்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை இதே பாணியை சாண்டோஸ் பின்பற்றினார். ஆனால், எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 52வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார் ரொனால்டோ. மாற்று வீரராக களமிறங்கியதும் சக வீரர்களை உற்சாகப்படுத்தத் தொடங்கினார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால், அவர் போர்ச்சுகல் ரசிகர்களை நோக்கி தனது கைகளை உயர்த்தி ஆதரவு கோரினார்.
ஒருகட்டத்தில் மொராக்கோ அணியின் வலுவான டிஃபென்ஸை தகர்க்க முயன்ற அவர், 82வது நிமிடத்தில் சக வீரர் ஜோவோ ஃபெலிக்ஸ் உதவியுடன் கோல் அடிக்க முயன்றார். இதுபோல் இருமுறை முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது. இப்படி, மொராக்கோவிற்கு எதிராக போர்ச்சுகல் அணி மீண்டு வருவதற்கு ரொனால்டோ எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய ஆட்ட நேரமும் முடிந்தது. இதனால், போர்ச்சுகல் பரிதாப தோல்வி அடைய மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார் ரொனால்டோ. கண்ணீருடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
சர்வதேச கால்பந்தாட்டத்தின் அனைத்து கால கோல் சாதனையாளரான கிறிஸ்டியானோ ரொனால்டா சமீபத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையின் 700-வது கிளப் கோல் மற்றும் சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களைப் பதிவுசெய்தார். 118 கோல்களுடன் ஆடவர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ, லீக் போட்டிகளில் கானா அணிக்கு எதிராக கோல் அடித்து ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் இந்த உலகக்கோப்பையில் படைத்தார்.
அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கக்கூடும். ஏனென்றால், அவருக்கு வயது 37.
Cristiano Ronaldo'nun gözyaşları... pic.twitter.com/Jh8fVIJjFs
— TRT Spor (@trtspor) December 10, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT