Published : 10 Dec 2022 10:58 PM
Last Updated : 10 Dec 2022 10:58 PM

FIFA WC 2022 | அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த மொராக்கோ: வெளியேறிய போர்ச்சுகல்

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி.

இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது போர்ச்சுகல். இம்முறையும் ரொனால்டோ ஆடவில்லை.

பரபரப்புடன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை வாய்ப்பு கிடைக்கும்போது நெருங்கின. ஆனால் ஒவ்வொரு முறையும் இரு அணிகளும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த கோல் கனவு கைகூடவில்லை. கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டு ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய 21 வயதான கோன்காலோ ரமோஸ்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப ஆட்டத்தின் இரண்டாவது நிமிடமே கோல் அடிக்க முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை.

யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டத்தின் முதல் பாதிக்கு முன்பாக 42வது மொராக்கோ வீரர் யூசெப் என்-நெசிரி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1 - 0 என்ற கணக்கில் மொராக்கோ முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது போர்ச்சுகல். இதனால், ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ களம்புகுந்தார். ஆனால் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இரண்டாம் பாதியில் மொராக்கோவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ரொனால்டோ இருமுறை முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது. இதனால், பௌனௌ தடுப்பாட்டத்தால் போர்ச்சுகல் பரிதாபமாக வெளியேறியது. இறுதியில் 1 - 0 என்ற கணக்கில் போர்ச்சுகல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ. இதன்மூலம் ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணியாக வரலாறு படைத்தது.

36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்தது மொராக்கோ. தற்போது கத்தார் உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x