Published : 10 Dec 2022 05:23 PM
Last Updated : 10 Dec 2022 05:23 PM

சேவாக், கெய்ல், ஜெயசூர்யா, கில்கிறிஸ்ட் கலந்த கலவை... உலக சாதனை நாயகன் இஷான் கிஷன்!

இரட்டைச் சதம் அடித்த மகிழ்ச்சியை கோலியுடன் பகிர்ந்து கொள்ளும் இஷான் கிஷன்

சட்டோகிராமில் நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியில் அதிரடி மன்னன் இஷான் கிஷன் 126 பந்துகளில் 23 பவுண்டரி 9 சிக்சர்களுடன் அதிரடி இரட்டைச் சதம் விளாசி 131 பந்துகளில் 24 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்த இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை உடைத்துள்ளார். சிறிய வயதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம், அதிவேக இரட்டைச் சதம், முதல் சர்வதேச சதமே இரட்டைச் சதம் என்று ஒரு சதத்தில் சாதனைகள் பல உடைந்துள்ளன.

விராட் கோலி இன்னொரு முனையில் 91 பந்துகளில் 11 அற்புதமான பவுண்டரிகள் 2 சிக்சருடன் 2019ம் ஆண்டு ஆகஸ்டிற்குப்பிறகு சத வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதுவும் சதத்துக்கான சிக்சர் ஷாட் உண்மையில் கிளாஸ் ரகம், முன் காலை குறுக்கே போட்டு ஸ்கொயர் லெக் மேல் ஒரே தூக்குத் தூக்கினாரே பார்க்கலாம். ஸ்டன்னிங் ஷாட். இதன் மூலம் தனது 72வது சர்வதேச சதத்தை எடுத்து ரிக்கி பாண்டிங் சத சாதனையை முறியடித்தார் கோலி, இப்போது இவருக்கு முன்னால் இருப்பது ஜாம்பவான் சச்சின் மட்டுமே. கோலியும், இஷான் கிஷனும் சேர்ந்து 280 ரன்கள் கூட்டணியை சுமார் 30 ஓவர்களில் சாதித்தனர் என்றால் இஷான் கிஷனின் அதிரடியின் அளவை ஊகித்து அறியலாம். இந்திய அணி 50 ஓவர்களில் 409/8 என்று பெரிய ஸ்கோரை எட்டியுள்ளது.

வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததில் தவறில்லை, ஆனால் விராட் கோலிக்கு வந்தவுடனேயே கேட்சை விட்டார் பாருங்கள் லிட்டன் தாஸ், அங்குதான் பெரும் தவறை இழைத்தனர். இஷான் கிஷனை அழகாக வழிநடத்தினார் விராட் கோலி, அவருக்கு உறுதுணையாக ஆட முடிவெடுத்து அழகாக சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை அதிகம் கொடுத்து அவரை அடிக்கச்சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார், இது இஷான் கிஷனின் இன்றைய தின வங்கதேச பவுலிங்கை படுகொலை (carnage) செய்வதற்கு பெரிய உத்வேகமாக அமைந்தது.

இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஒன்றுமே செய்யாமல் பெரிய அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். ஆனால் அவர் தன் திறமை மேல் என்றைக்கும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதற்கு இந்த மிகப்பெரிய ஒருநாள் இன்னிங்ஸ், ஆல்டைம் கிரேட் ஒருநாள் இன்னிங்ஸ் ஒரு சான்றாக அமைந்தது.

ஷிகர் தவானின் இந்திய அணியில் அனுபவித்த இடம் இன்றோடு முடிவுக்கு வந்தது. அவர் இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் அடித்த ஸ்கோர் 7, 8, மற்றும் 3. 15/1 என்ற நிலையில் கோலி, இஷான் கிஷனுடன் இணைந்தார். ஏற்கெனவே இஷான் கிஷன் அற்புதமாக ஆஃப் சைடில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்தார். 11 ஓவர்களில் ஸ்கோர் 49/1 என்று மெதுவாகவே சென்று கொண்டிருந்தது.

12-வது ஓவரிலிருந்து ஆரம்பித்தார் இஷான் கிஷன் தன் ஆக்ரோஷ அதிரடியை. எபாதத் ஹுசைன் வந்தார் அவரை பாயிண்டில் ஒரு கட் ஷாட் பவுண்டரி. பிறகு ஒரு லெக் பை 4 ரன்கள், அடுத்து ஷார்ட் பிட்ச் பந்து டீப் மிட்விக்கெட்டில் புல் ஷாட்டில் சிக்ஸ் பறந்தது. இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தை டென்னிஸ் ஷாட்டில் நேராக பவுண்டரி விளாச இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். ஷாகிப் பந்தைத் தட்டி விட்டு 49 பந்துகளில் அரைசதம் கண்டார் இஷான்.

அதன் பிறகு எங்கு போட்டாலும் அடி, என்ன போட்டாலும் அடி என்ற ரீதியில் இறங்கினார் இஷான் கிஷன், வங்கதேச பவுலிங் பூப்பூவாய் உதிர்ந்து போனது. டஸ்கின் அகமதுவை தன் 2வது புல்ஷாட்டில் சிக்ஸ் விளாசினார் இஷான் கிஷன், கடைசியில் அபீப் அகமது பந்தை பயங்கரமான ஸ்வீப் ஷாட் ஒன்றை ஆடி பவுண்டரியுடன் 83 பந்துகளில் சதம் கண்டார்.

சதம் கண்டது இன்னொரு புதிய வெறி அவர் உடலில் புகுந்தது. எபாதத் ஹுசைனை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் விளாசினார். பிறகு ஷாகிப் அல் ஹசனை ஒதுங்கிக் கொண்டு காலியான எக்ஸ்ட்ராகவரில் தூக்கி அடித்து பவுண்டரி, அதே ஓவரில் இறங்கி வந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ். பிறகு மீண்டும் இதே ஓவரில் முன் காலை விலக்கிக் கொண்டு மிட்விக்கெட் மேல் வெறித்தனமான சிக்ஸ். 27வது ஓவரில் 20 ரன்கள் வந்தது. அடுத்த ஓவரில் எதிர்முனை வீரர் கிங் கோலி 54 பந்துகளில் அரைசதம் கண்டார்.

அந்த ஓவரை மெஹதி ஹசன் வீச ஸ்ட்ரைக்கிற்கு வந்த இஷான் கிஷன் அவரை ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடி டீப் ஸ்கொயர் லெக்கில் பெரிய சிக்சரை விளாசி 103 பந்துகளில் 150 என்ற மைல்கல்லை அனாயசமாக எட்டினார். அதாவது 83 பந்துகளில் சதம் அடுத்த 20 பந்துகளில் 150 என்ற மைல்கல் காட்டடி தர்பார்!! அடுத்த பந்தை 150-ஐக் கொண்டாடும் விதமாக நேராக ஒரு மட்டையை பவுண்டரிக்கு விளாசினார்.

இப்போது எங்கு போட்டாலும் அடி எப்படி வீசினாலும் அடி என்ற மூடுக்கு மேலும் உக்கிரமானார் இஷான் கிஷன், எபாதத் ஹுசைன் ஒரு பந்தை ஸ்லோவாகக் குத்தி எழுப்ப அதை ஒரு கையிலேயே ஒரு பவுண்டரி அடித்தார் பண்ட் ஸ்டைல். மெஹதி வந்தார் அவரை முழங்காலிட்டு டீப் மிட்விக்கெட் மேல் இன்னொரு சிக்ஸ். மீண்டும் நேராக பந்து உடைந்து விடும் போல் ஒரு பவுண்டரி பிறகு அதே ஓவரில் இன்சைடு அவுட் எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரி. 30வது ஓவர் முடிவில் இந்தியா 246/1.

இஷான் கிஷன் 113 பந்துகளில் 20 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 179. முஸ்தபிசுர் பந்தை கொஞ்சம் ஷாட் ஆக வீச தேர்ட் மேன் மேல் அப்பர் கட் பவுண்டரி விளாசி 183 என்று கங்குலி, தோனி, கோலி ஆகியோரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை எட்டினார். பிறகு டஸ்கின் அகமது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி 197 ரன்களுக்கு வந்தார் இஷான் கிஷன். அடுத்ததாக யார்க்கர் லெந்த் முஸ்தபிசுர் பந்தை சிங்கிள் எடுத்து 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்று உலக சாதனை புரிந்தார் இஷான் கிஷன்.

அதன் பிறகு டஸ்கினை மீண்டும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 210 ரன்களுக்கு வந்த போது 36வது ஓவர்தான் நடந்து கொண்டிருந்தது. 50 ஒவர்கள் ஆடியிருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய முதல் நாயகனாகியிருப்பார் இஷான் கிஷன். ஆர்வம் மேலிட்டது... ஆனால் அதே ஓவரில் டஸ்கினின் லெந்த் பந்தை ஒரே தூக்குத் தூக்கினார் நேராக எல்லைக் கோட்டுக்கு சில இஞ்ச்கள் முன்னே கேட்ச் ஆகி வெளியேறினார்.

வங்கதேச பந்து வீச்சை இப்படித்தான் ஆட வேண்டும் என்று காட்டினார் இஷான் கிஷன், இதே அணுகுமுறையை இவரை களமிறக்கி முதல் 2 போட்டிகளிலும் ஆடியிருந்தால் நிச்சயம் இந்தத் தொடரை நாம் இழந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் போன்றோர் வங்கதேச பவுலிங்கை புரட்டி எடுக்கும் போது இந்திய அணி அங்கு போய் தோற்றது பேரிழிவுதான் ஆனால் இந்த இரட்டைச் சதம் மூலம் அதைப் போக்கி விட்டார் இஷான் கிஷன்.

இந்த இன்னிங்ஸ் கிறிஸ் கெய்ல், சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், ஜெயசூரியா ஆகியோரது அதிரடி ஆட்டங்களின் கலவை என்றே கூற வேண்டும். இவர்கள் ஆடினால் எப்படி எதிரணியினர் பீல்டிங் செட் செய்ய திணறி கடைசியில் கைவிட்டு விடுவார்களோ அதே போல்தான் இன்று இஷான் கிஷன் திடீரென காட்டடி அடிக்கத் தொடங்கியவுடன் வங்கதேச அணி திருதிருவென விழித்து செய்வதறியாமல் திகைத்துப் போனது. எங்கு போட்டாலும் அடி. எப்படிப் போட்டாலும் அடி என்றால் என்னதான் செய்ய முடியும்? இப்படித்தான் வங்கதேச பந்து வீச்சை ஆட வேண்டும்.

இஷான் கிஷனின் இந்த இன்னிங்ஸை உடனடியாக பாராட்டித் தள்ளிய சேவாக், தன் ட்விட்டர் பக்கத்தில், “இப்படித்தான் ஆட வேண்டும்!! பிரில்லியண்ட் இஷான் கிஷன். இது போன்ற அணுகுமுறைதான் இந்திய அணிக்கு பெரிய நன்மைகளைச் செய்யும்” என்று கூறியுள்ளார். அதிரடி மன்னனே கூறிவிட்டார் இதுதான் ஆட்டம் என்று! இனி என்ன இஷான் கிஷன் இப்படித்தான் ஆடவேண்டும்! அவரை இனி அணியிலிருந்து கழற்றி விட்டு பெஞ்சில் அமர வைக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x