Published : 10 Dec 2022 04:40 AM
Last Updated : 10 Dec 2022 04:40 AM
லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக ஆட்டத்தின் இறுதி நொடி வரை போராடின. 35 மற்றும் 73-வது நிமிடத்தில் 2 கோல்களை பதிவு செய்து 2-0 என வலுவான முன்னிலை பெற்றிருந்தது அர்ஜென்டினா.
ஆனால், 83-வது நிமிடம் மற்றும் கூடுதல் நேரமாக வழங்கப்பட்ட 10 நிமிடத்தின் கடைசி சில நொடிகள் என 2 கோல்களை பதிவு செய்து 2-2 என சமன் செய்தது நெதர்லாந்து. அந்த இரண்டு கோல்களையும் தன் அணிக்காக வவுட் வெகோர்ஸ்ட் (Wout Weghorst) பதிவு செய்திருந்தார். கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.
அதன் பிறகு ஆட்டத்தில் முடிவு எட்ட வேண்டி கூடுதலாக மேலும் 30 நிமிடம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா 4 கோல்கள் பதிவு செய்து அசத்தியது. நெதர்லாந்து 3 கோல்கள் மட்டுமே ஸ்கோர் செய்தது. அதனால் அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் புதன்கிழமை அன்று நடைபெற உள்ள அரையிறுதியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது அந்த அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT