

மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்கவே தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் விளையாடியவர்.
73 வயதான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையைச் சேர்ந்தவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் குறித்து கவாஸ்கர் இப்படி சொல்லியுள்ளார்: “சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன்” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
23 வயதான உம்ரான் மாலிக், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். இவர் புயல் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் அடையாளம் காணப்பட்டவர். இதுவரை 7 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் களத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.