Published : 09 Dec 2022 09:59 AM
Last Updated : 09 Dec 2022 09:59 AM

FIFA WC 2022 | ‘மரணம் வாழ்வின் ஓர் அங்கம்’-  கத்தார் உலகக் கோப்பை தலைவருக்கு குவியும் கண்டனங்கள்

கத்தார் உலகக்கோப்பை கமிட்டித் தலைவர் நாசர் அல் காதர்

கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து நல்ல தொடராக பெரிய சர்ச்சைகளின்றி நல்ல முறையில் நடந்து வருகிறது என்று ஒருபுறம் ஊடகங்கள் கூறினாலும் இன்னொரு புறம் அதன் கட்டுமானப்பணியின் போது இறந்தவர்கள் பற்றியும் போதிய கூலி கொடுக்காமல் விரட்டப்படும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த புலம்பெயர்ந்த கட்டிடத் தொழிலாளர் சீலைன் ரிசார்ட்டில் கார் பார்க்கிங்கில் விளக்குகளைப் பொருத்தும் பணியின் போது வாகனத்துடன் நடந்து செல்லும் போது சரிவுப் பாதையில் இருந்து தலைக்குப்புற கான்கிரீட் மீது மோதி விழுந்து இறந்தது பெரிய கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இந்தக் கால்பந்துத் தொடரின் சமீபத்திய சர்ச்சை இதுதான். இது குறித்து கத்தார் உலகக்கோப்பை கமிட்டித் தலைவர் நாசர் அல் காதர் என்பவரிடம் கேட்ட போது பத்திரிகையாளர்களை நோக்கி அவர், “ஏன் எப்போதும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தையும் மாற்றுப் பாலினர்கள் விவகாரத்தை மட்டுமே கொண்டு வருகிறீர்கள்?” என்று எரிச்சலுடன் கேட்டதாக தி கார்டியன் இதழ் தன் கட்டுரையில் எழுதியுள்ளது.

அவர் கூறிய கண்டனத்திற்குரிய கூற்று இதுதான்: நாம் உலகக்கோப்பை ஆட்டங்களின் மத்தியில் இருக்கிறோம். வெற்றிகரமான உலகக்கோப்பை இது. இந்த நிலையில் இந்த விஷயங்களைப் பேச வேண்டுமா? ஒரு தொழிலாளர் இறந்துள்ளார், அவரது குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதை முதல் கேள்வியாக கேட்கிறீர்கள் பாருங்கள் அதுதான் எனக்கு விசித்திரமாக இருக்கிறது.

இதோ பாருங்கள்! இந்த உலகக்கோப்பையில் தொழிலாளர் மரணம் என்பது பெரிய விஷயமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வரும் செய்திகளெல்லாம் முற்றிலும் பொய். பத்திரிகையாளர் இந்த தவறான செய்திகளை ஊதிப்பெருக்கி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் தங்களைத் தாங்களே ‘ஏன் இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ள வேண்டும். மரணம் என்பது வாழ்வின் இயற்கையான அங்கம். மரணம் வேலை செய்யும் இடத்தில் நிகழ்ந்தாலும் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்தாலும் மரணம் வாழ்வின் இயற்கையின் ஓர் அங்கம்” என்று கூறினார்.

இதனையடுத்து மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துக் கூறுகையில், “புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த இவர்களது அலட்சியத்தையும், கர்வமான மனப்போக்கையுமே இது வெளிப்படுத்துகிறது. அவர் மரணம் இயற்கை என்கிறார், ஆனால் இறந்த பல தொழிலாளர்களின் மரணத்தை தடுத்திருக்க முடியும் என்பதே உண்மை. எல்லாமே இயற்கை மரணங்கள் என்கின்றனர், இதை விடப்போவதில்லை, விசாரணை அமைத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். கடும் வெப்ப நிலை உள்ள ஒரு நாட்டில் பட்டப்பகலில் வேலை செய்கின்றனர் தொழிலாளர்கள். இது பற்றி என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்?” என்று கடும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

உலகக்கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரை நடத்த உரிமை பெற்ற பிறகே கத்தார் உலகக்கோப்பைக் கட்டுமானப் பணிகளில் இதுவரை 6,500 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக கார்டியன் பத்திரிகை ஏற்கெனவே குறிப்பிட்டு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. ஆனால் 400-500 மரணங்கள் என்று அங்கு கூறப்பட்டு வருகிறது. எண்ணிக்கையா முக்கியம் என்று மனித உரிமை அமைப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவராக இருந்தாலும் அலட்சியத்தினால் மரணம் விளைந்தால் அது அமைப்பாளர்களின் பொறுப்பே என்கின்றனர் மனித உரிமை அமைப்பினர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x