Published : 26 Jul 2014 03:16 PM
Last Updated : 26 Jul 2014 03:16 PM
நாளை ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் ஸ்டூவர்ட் பின்னிக்குப் பதிலாக ரோகித் சர்மா களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 பவுலர்கள் மற்றும் 7 பேட்ஸ்மென்கள் என்ற ஃபார்முலாவுக்கு எம்.எஸ்.தோனி திரும்பலாம் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காரணம் வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா முதலில் பேட் செய்ய வந்ததோடு அவர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். இதனால் ரோகித் சர்மா நாளை விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலியின் ஃபார்ம் சந்தேகமாக இருப்பதால் கூடுதல் பேட்ஸ்மெனை இந்திய கேப்டன் களமிறக்க முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் ஸ்டூவர்ட் பின்னி வலைப்பயிற்சியில் நேற்று இறங்காததும் ரோகித் சர்மா வரவை உறுதி செய்வதாக உள்ளது.
டிரெண்ட் பிரிட்ஜ் பிட்ச் சுத்தமான பேட்டிங் களமாக அமைய, கடும் விமர்சனங்களுக்குப் பிறகு லார்ட்ஸ் பிட்ச் வழக்கத்திற்கு விரோதமாக அதிக பவுன்ஸ், ஸ்விங் பிட்சாக அமைக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் வழிந்தனர்.
ஏஜியஸ் பவுல் பிட்ச் கடினமாக உள்ளது மற்றும் பந்துகள் வேகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லார்ட்ஸ் அளவுக்கு மேலதிக ஸ்விங் இருக்காது என்றே மைதான பிட்ச் தயாரிப்பாளர் கூறுகிறார்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக வலையில் அதிக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான். 7 பேட்ஸ்மென்கள் ஃபார்முலாவில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு எழுந்திருக்குமா இங்கிலாந்து என்ற சந்தேகம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா சற்றே பாதுகாப்பு உத்தியில் செல்கிறதோ என்ற கேள்வியை இங்கிலாந்திடத்தில் ஏற்படுத்திவிடக் கூடாது.
பின்னி தேவையில்லை என்றால் அஸ்வினையே அணியில் சேர்க்க வேண்டும். ரோகித் பின்னால் களமிறங்கி ஆடுவதை அஸ்வினே ஆடிவிடக்கூடியவர்தான். நமக்கும் 5 சிறப்பு பவுலர்கள் கிடைப்பார்கள். ஒருவேளை ரோகித்தை அணியில் எடுக்கக்கோரி ஏதாவது மறைமுக நெருக்கடி இருக்கிறதா என்பது பற்றித் தெரியவில்லை.
மேலும் 5வது பவுலர் ஒருவர் இருந்தால், அதுவும் அஸ்வினாக இருந்தால் ஷமி, புவனேஷ், இஷாந்த் சர்மாவை களைப்படைய விடாமல் சுழற்சி முறையில் குறைந்த ஓவர்கள் ஸ்பெல்லில் கொடுக்கும் அனுகூலம் உள்ளது.
ஆனால் லார்ட்ஸ் வெற்றிக்குப் பிறகும் கூட தோனி, 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றே கூறினார்.
இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸைத் தூக்கிவிட்டு ஜோர்டானை அணியில் எடுக்கவேண்டும். ஆனால் இங்கிலாந்து அப்படிச் செய்யுமா என்று தெரியவில்லை. நல்ல ஸ்பின்னர் ஒருவர் கூட இங்கிலாந்தில் இல்லை. அதுவே அந்த அணியின் தடுமாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது.
மேலும் இஷாந்த் சர்மா வீசிய 135கிமீ வேக பவுன்சருக்கே குறிபார்த்து நேராக ஃபீல்டர் கையில் அடித்து அவுட் ஆகும் இங்கிலாந்து இம்முறை இஷாந்த் மேலும் ஒரு 5கிமீ வேகம் கூட்டினால் தடுமாறும் என்று எதிர்பார்க்கலாம்.
அலிஸ்டர் குக்கை பேட்டிங்கில் எழும்ப விடாமல் செய்ய வேண்டும், தொடர்ந்து அவரைக் காலி செய்தால் இங்கிலாந்து காலியாகி வருகிறது. இதைத்தான் மைக்கேல் கிளார்க் செய்தார். இந்தியாவும் இதையே தொடர வேண்டும்.
இன்னொரு அருமையான டெஸ்ட் போட்டி காத்திருக்கிறது. நாளை 3.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT